புதுதில்லி:
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘மெட்ரோ கேஷ் அண்ட் கேரி’ நிறுவனம், இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பலசரக்குக் கடைகளைத் திறக்கப் போவதாக அறிவித்து, அதிர்ச்சி அளித்துள்ள்து.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தது, ‘மெட்ரோ கேஷ் அண்ட் கேரி’ நிறுவனம். மிகப்பெரிய பன்னாட்டு மொத்த விற்பனை நிறுவனமான ‘மெட்ரோ கேஷ் அண்ட் கேரி’ இந்தியாவில் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 5 லட்சம் பலசரக்குக் கடைகளைத் திறக்கத் திட்டம் போட்டுள்ளது.
பொது வணிக உத்தியின் அடிப்படையில் இதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறியிருக்கும் மெட்ரோ நிறுவனம், உலகளாவிய அளவில், அமெரிக்காவின் வால்மார்ட்டுக்கு போட்டியாகத் திகழும் நிறுவனம் ஆகும்.இந்தியச் சந்தைகளில் தனது செயல்பாட்டை விரிவாக்கும் விதமாக, ஏற்கெனவே தொழில்நுட்ப நிறுவனமான ஸ்நாப்பிஷ் நிறுவனத்துடன் இணைந்து, மெட்ரோ கேஷ் அண்ட் கேரி செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் தில்லியில் 100 சில்லரை விற்பனை நிலையங்களை டிஜிட்டல் மயப்படுத்த மென்பொருள் மற்றும் வன்பொருள் வசதிகளை இந்நிறுவனம் செய்து கொடுத்து வருகிறது.

இந்நிலையில், செப்டம்பர் இறுதிக்குள் இந்தியாவில் தனது 27-ஆவது கடையை மெட்ரோ நிறுவனம் திறக்கும் என்றும், அதைத்தொடர்ந்து, 2020-ஆம் ஆண்டுக்குள் 50 கடைகளைத் திறக்கவும், ஒட்டுமொத்தமாக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் சில்லரை விற்பனை கடைகளை திறக்கவும் மெட்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்திய ஆன்லைன் சில்லரை வர்த்தக நிறுவனமாக பிளிப்கார்ட் இருந்தது. இதனை அண்மையில்தான் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனமான வால்மார்ட் விலைக்கு வாங்கியது. அடுத்ததாக நாடு முழுவதும் தனது கிளைகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது.அதிநவீன சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் வால்மார்ட் திறக்கப் போகும் கடைகளை எண்ணி, ஏற்கெனவே உள்ளூர் சில்லரை வர்த்தகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். வால்மார்ட் கடைகளை அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

இந்நிலையில், மற்றொரு ஆபத்தாக ஜெர்மனி நாட்டின் ‘மெட்ரோ கேஷ் அண்ட் கேரி’ நிறுவனமும் இந்தியாவில் 5 லட்சம் கடைகளைத் திறந்து பலசரக்கு வியாபாரத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது, இந்திய சிறு வர்த்தகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.