மேட்டுப்பாளையம்,
ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு பொரி உற்பத்தி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை பகுதியில் தயாராகும் பொரிக்கு தனி சுவை உண்டு என்பதால் விழா காலங்களில் இங்கு ஆயிரக்கணக்கான பொரி மூட்டைகள் உற்பத்தி செய்யப்படும். ஐ.ஆர். 64 நெல்லே பொரி உற்பத்திக்கு உகந்தது. ஒரு மூட்டை நெல்லில் இருந்து ஏழு மூட்டை பொரி உற்பத்தி செய்ய இயலும். நெல்லை குறைந்தபட்சம் ஏழு நாட்கள் வெயிலில் நன்கு காய வைத்த பின்னர் 240 டிகிரி வெப்பத்தில் பொரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக்கள் நெருங்குவதால் பொரி உற்பத்தி பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.  முன்பு பெரும்பாலான மக்கள் சாதாரண நாட்களில் கூட பொரி கடலை வாங்கி சத்தான நொறுக்கு தீனியாக வீட்டில் இருப்பு வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்டு மகிழ்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட சிப்ஸ் போன்ற பல்வேறு உணவு பொருட்களின் வரவால் பொரிக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது. நுகர்வு குறைவு மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம், கூலியாட்கள் பற்றாக்குறை போன்றவற்றால் குடிசை தொழிலான பொரி உற்பத்தி தொழில் நலிவடைந்தே வருகிறது. ஆனாலும் திருவிழா காலங்களில் தவிர்க்க முடியாத உணவு பொருளாக பொரி இருப்பதாலும், ஆயுத பூஜைக்காக பெரிய தொழிற் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்க மூட்டைகணக்கில் பொரி வாங்குவார்கள் என்பதாலும் காரமடை பகுதியில் பொரி உற்பத்திப் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.