நாமக்கல்,
வார்பிங் சைசிங் தொழிலாளர்களுக்கு 40 சதவிகித போனஸ் வழங்கிட வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிலுள்ள தோழர் சேஷாசலம் நினைவரங்கத்தில் நாமக்கல் மாவட்ட வார்பிங் சைசிங் தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) 10 ஆம் ஆண்டு மகாசபை கூட்டம் சங்க நிர்வாகி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.தமிழ்மணி துவக்க உரையாற்றினார். செயலாளர் எம்.செங்கோடன், கே.வீரமணி ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர். இதில் மாவட்ட உதவி தலைவர் டி ராமசாமி, மாவட்ட உதவி செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், டிஎம்எஸ் சங்க உதவி செயலாளர் எம்.சிவானந்தம், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன், மாவட்ட பொருளாளர் ஆர் வேலாயுதம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இப்பேரவையில், வார்பிங் சைசிங் தொழிலாளர்களுக்கு 2017 -18 ஆம் ஆண்டிற்கு போனஸாக 30 சதவிதமும், ஊக்க போனஸாக 10 சதவிகிதமும் ஆக மொத்தம் 40 சதவிகிதம் சைசிங் நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கௌரவ தலைவராக கே.நாராயணன், தலைவராக எம்.சிவானந்தம், செயலாளராக எம்.செங்கோடன், பொருளாளராக கே.வீரமணி மற்றும் 9 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. முடிவில், சிஐடியு மாவட்டசெயலாளர் ந.வேலுசாமி நிறைவுரையாற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: