தற்பாலின இணக்கம் குற்றமல்ல. இனி இவர்களையும் சக மனிதர்களாகப் பார்க்க வேண்டும் என்று கடந்த 6ம் தேதி (06-09-2018) உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 2013 ல் தில்லி உயர்நீதிமன்றம் தற்பாலின இணக்கமுள்ளவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியிருந்தாலும் தற்போதைய தீர்ப்பு அவர்களின் உறவு மற்றும் வாழ்க்கையை அங்கீகரிப்பதில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி வருவதற்கு முன் இந்தியச் சமூகத்தில் திருநங்கையர், திருநம்பி, தற்பாலின இணக்கம் உள்ளவர்கள் என அனைவரும் கண்ணியமாக, சமமாக நடத்தப்பட்டனர். பிறகு, ஆங்கிலேயர் ஆட்சி எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் மாறுபாலினத்தவரையும் தற்பாலின இணக்கம் உள்ளவர்களையும் ஒடுக்க, குற்றப்பரம்பரை சட்டம் மற்றும் 377 சட்டப் பிரிவில் தற்பாலின இணக்கம் தண்டனைக்குரியது என்று சொல்லி அம்மக்களை இழிவுப்படுத்தித் துன்புறுத்தியது.

நாடு சுதந்திரம் பெற்ற பின் தொடர்ந்து நடத்திய நெடிய போராட்டத்தின் பலனாக தற்போது உச்சநீதிமன்றம் தற்பாலின இணக்க உறவைத் தண்டனைக்குரிய குற்றமெனக் கூறும் பகுதியை மட்டும் நீக்கிவிட்டது.  இதற்கு முன் நால்சா (இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையம்) தொடுத்த வழக்கில், 2014ல் உச்சநீதிமன்றம், சமூகத்தில் திருநங்கையர் சுதந்திரமாகவும் சமமாகவும் வாழ்ந்திடும் அங்கீகாரத்தை அளித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியது. இந்தத் தீர்ப்பு, தமிழில் தோழர் தமிழ்மணவாளன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, அது, “நீளும் கைகள்”, என்னும் புத்தகமாக வெளி வந்துள்ளது. ஏப்ரல் 15, 2018ல் திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, ”நீளும் கைகள்”, மொழிபெயர்ப்பு நூலினை புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி அவர்களால் வெளியிடப்பட்டு அம்மாநிலத்தில் உள்ள 200 திருநங்கைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. தமிழில் வாசித்த திருநங்கையர் தோழிகள் மாறுபாலினச் சமூகத்தினருக்கு நேரடியாக உரிமைகளைக் கோரும் ஒரு ஆயுதமாக இந்த தீர்ப்பு உள்ளது. ஆயினும் 2014 தீர்ப்பு வந்தவுடன் தமிழில் மொழிபெயர்த்து எங்கள் கைகளில் கிடைத்திருந்தால் பல பிரச்சனைக்கு முன்பே தீர்வு கண்டிருப்போம் என்று கூறினர்.

இந்த வழக்கில் நீதிபதி, நமது சமூகம், ரயில்நிலையம், பேருந்துநிலையம், பள்ளிக் கூடங்கள், பணியிடங்கள், வளாகங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களில் மாறு பாலினத்தவர் மீது அடிக்கடி தவறிழைப்பது கேலிக் கூத்தானது. அவர்கள் ஓரங்கட்டப்படுவதும் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவதும் மாறுபாலின அடையாளத்தையும் தோற்றத்தையும் தழுவிக் கொள்வதால் சமூகத்திற்கு இருக்கும் விருப்பமின்மையால் விளைந்த தார்மீகத் தோல்வி என்பதை மறந்துவிடுகிறோம். இது நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு மனநிலையாகும் என்று நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது சிறப்பாகும். நீதிபதிகளின் விருப்பத்தின் அடிப்படையில் இத்தீர்ப்பைக் கொடுக்கவில்லை. இந்த வழக்கை வாதிட்ட வழக்கறிஞர்கள் வாதம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மாறுபாலினத்தவரின் வரலாற்றுப் பின்புலத்தையும் இந்து புராணக்கதை, வேத மற்றும் புராண இலக்கியங்களை உதாரணம் காட்டியுள்ளனர். இஸ்லாமிய அரச மன்றங்களில் வகித்த முக்கிய பங்கினையும் முன் வைத்துள்ளனர். ரத்து செய்யப்பட்ட 1871 ஆம் ஆண்டின் குற்றப் பரம்பரைச் சட்டத்தை மேற்கோள் காட்டி பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்காலத்தில் அவர்கள் நடத்தப்பட்ட மனிதத்துவமற்ற தன்மையை விளக்கியுள்ளனர். சர்வதேச மன்றங்கள், ஐ.நா அமைப்புகள் பாலின அடையாளத்தை அங்கீகரித்திருப்பதையும் மேற்கோள் காட்டி அவை பல்வேறு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதையும் விளக்கியுள்ளனர்.

மாறு பாலின நபர்களுக்கு பிறநாடுகளில் வழங்கப்படும் அங்கீகாரத்திற்கான சில சட்டத் தொகுப்புகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. மாறு பாலின நபர்களுக்கு பிறநாடுகளில் வழங்கப்படும் அங்கீகாரத்திற்கான சில சட்டத் தொகுப்புகளை விளக்கியுள்ளனர். … மாறு பாலினம் என்பது ஒரு நோயா என்னும் கேள்வி மாறு பாலினத்தவர் மற்றும் உளவியல் மருத்துவர்களால் விவாதிக்கப்படுகிறது. ஆனால் பரவலான பார்வையாக மாறு பாலினம் என்பது நோயல்ல. அது தீங்கற்ற இடது கைப் பழக்கம் போன்ற மாறுபாடே என்கிறார் நீதிபதி எம்.கே. சிக்ரி.ஒருவரின் பாலின அடையாளத்தைத் தேர்வு செய்வது அடையாளத்திற்கான பாதுகாப்பு, கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்வது மாறு பாலினத்தவர்க்கு வாழும் உரிமை மற்றும் கண்ணியமான சுதந்திரம், அந்தரங்க உரிமை மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம், கல்வி உரிமை, அதிகாரம், வன்முறைக்கு எதிரான உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, பாகுபாட்டுக்கு எதிரான உரிமை உட்பட அடிப்படை உரிமைகள் காரணமின்றி மறுக்கப்படுவது ஏன் எனத் தெரியவில்லை. மாறு பாலினத்தவரை மூன்றாம் பாலினமாக அங்கீகரிப்பதன் வாயிலாக இந்த நீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியை மட்டும் நிலை நிறுத்தாமல் இதுவரை சட்டப்படியான, இயற்கையான மற்றும் அரசமைப்பின் உரிமைகளை, இழந்தோர்க்கு நீதியை வழங்குகிறது. எனவே, மாறு பாலினத்தவர்க்கு மட்டும் நீதியை உறுதிப்படுத்தாமல் சமூகத்துக்கு ஒட்டுமொத்தமாக உறுதி செய்கிறது. சமூக நீதியென்பது சட்டத்தின் முன் சமம் என தாளில் மட்டும் இல்லாமல் அரசமைப்பின் ஆன்மாவாகப் போற்றிப்பேண வேண்டும் என்றும்அவர் கூறினார்.

இத்தீர்ப்பை தமிழக அரசு இது வரை அமல்படுத்தவில்லை. மேலும் அதற்கான அழுத்தத்தை தொடர்ந்து மாறுபாலின சமூகத்தினருக்காகப் போராடும் சமூகம் சார்ந்த அமைப்புகளும் இடதுசாரி அமைப்புகளும் தான் முன் எடுக்க வேண்டும். அதற்கொரு ஆவணக்கையேடாக இந்த மொழி பெயர்ப்பு நூல் இருக்கும் என்பது நிச்சயம்.

Leave a Reply

You must be logged in to post a comment.