கோவை,
கோவை மருதமலை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றித்திரியும் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மருதமலை அடிவாரம், ஆனைமடுவு, ஐஒபி காலனி, பொம்மனம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரண்டு காட்டு யானைகள் சுற்றி வருகிறது. இரவு நேரத்தில் வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும், தோட்டத்தில் உள்ள வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பொம்மனம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் நுழைந்த யானைகள் அங்கிருந்த தடுப்பு வேலியை உடைத்து தள்ளி யானைகள் அங்கு பயிரிடப்பட்டு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரக்கன்றுகளை ருசித்து சென்றது. இதே தோட்டத்திற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நுழைந்த யானை அங்கிருந்த 74 வாழை, 8 பாக்கு மரங்களை சேதப்படுத்தி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படும் காட்டு யானையை விரட்டவனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ரோந்துபணியில் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், யானை நடமாட்டத்தை கண்காணிக்க வேட்டை தடுப்பு காவலர்கள், வன ஊழியர்கள் இரவு நேரத்தில் ரோந்து பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. யானை குறித்ததகவலறிந்தால் பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் செல்வது, வீட்டின் வெளியே தூங்குவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.