விழுப்புரம்,
மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநிலசெயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் (ஞாயிறு) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: சென்னையில் நடைபெற்ற ஒருஆர்ப்பாட்டத்தில் காவல்துறையையும், முதலமைச்சரையும் அவதூறாக பேசியதற்காக திரைப்படநடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பேசியது விமர்சனத்துக்குரியது. அதேசமயம்காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறையையும், நீதிமன்றத்தையும் மிக இழிவாகவும், அவதூறாகவும் பேசிய ஹெச்.ராஜா சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியால் புகார் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறைக்கும், நீதிமன்றத்திற்கும் சவால் விடுக்கும் முறையில் காவல்துறை பாதுகாப்புடன் பொதுநிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். அவருக்கு பாதுகாப்பு அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு அவரது இருப்பிடம் தெரியும் நிலையில் அவரை பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப் பட்டிருப்பதாக சொல்லப்படுவது கேலிக்கூத்தாகவும், சிறுபிள்ளைத் தனமாகவும் இருப்பதோடு, காவல்துறையின் மதிப்பையும், நம்பகத்தன்மையையும், நேர்மையையும் பொதுமக்கள் மத்தியில் வெகுவாக குறைத்திருக்கிறது.

சட்டவிதிகளின் படியல்ல ஆளுங்கட்சி விருப்பப்படி:
இதேபோன்று கடந்த காலத்தில் எஸ்.வி. சேகரை கைது செய்ய முடியவில்லை என்று காவல்துறை கூறிக் கொண்டிருந்ததும், தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த நிகழ்வுக்காக மாணவி சோபியா கைது செய்யப்பட்டு அவரது பாஸ்போர்ட் கேட்கப்பட்டதும் ஆனால், சோபியாவின் தந்தை கொடுத்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும், காவல் துறை சட்ட விதிகளின் படியல்ல; ஆளுங்கட்சி விருப்பப்படி நடந்து கொள்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக காவல்துறை அதிகாரிகள், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் தேடுதல் மற்றும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அதற்கு பயந்து பாஜக தலைமையிலான மத்திய ஆட்சியாளர் களின் விருப்பப்படி செயல்படும் அமைப்பாக காவல்துறை மாற்றப் பட்டிருக்கிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்த அணுகு முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்யவேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

You must be logged in to post a comment.