இம்மாதம் (செப்டம்பர்) 5ம் நாள் புது தில்லியில் ஒரு மாபெரும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி இது. இதை விடப் பெரிய பேரணிகளை கடந்த காலங்களில் தில்லி மாநகரம் கண்டிருக்கிறது. ஆனால், அண்மைக் காலத்தில் இத்தனை பெரிய பேரணி நடந்ததில்லை. பொதுவாக வர்க்கஅடிப்படையிலான திரட்டல் சிரமங்கள் அதிகரித்திருக்கும் இந்தக் காலத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சி இது என்பதனை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இந்தசிரமங்களை எல்லாம் மீறி நடக்கும் நிகழ்ச்சி என்பது தவிர, முற்றிலும் வேறுபட்ட வகையில் இந்தப் பேரணியின் முக்கியத்துவம் அமைகிறது.

சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக…
சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என தெளிவான மூன்று வர்க்கங்கள் இணைந்து நடத்திய இயக்கம் இது என்பதே இதன் கூடுதல் முக்கியத்துவம். இந்த உழைக்கும் பகுதியினரின் பேரணிகள் பல முறை
தனித்தனியாக நடந்திருக்கின்றன. எனினும், அனைவரும் இணைந்து, அதுவும் விவசாயத் தொழிலாளரையும் இணைத்து நடத்துவது இதுவே முதல் முறை. இந்தப்பேரணியில் கலந்து கொண்ட அமைப்புக்கள் அனைத்துமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யுடன் தொடர்புடையவை என்பதால், ஒரு மையப்படுத்தப்பட்ட முடிவின் அடிப்படையில் இது நடைபெற்றது என்பதாக மட்டும் இதை சாதாரணமாக மதிப்பிட்டு விடக்கூடாது. இப்போது நடைபெற்றது, இதற்கு முன்னர் நடைபெறவில்லை. அதற்கான யோசனை இது வரை யாருக்கும் தோன்றவில்லை என்பது தான் காரணமா? இல்லை. மாறாக, கடந்த காலங்களில் இல்லாத நிலைமைகள் இந்த வர்க்கங்களுக்கிடையே இத்தகைய ஒற்றுமையினை உருவாக்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்றைய நவீன தாராளவாத ஆட்சி தொழிலாளர்களையும், விவசாயிகளையும் வரலாறு காணாத வகையில் இந்த அளவிற்கு இணைத்திருக்கிறது என்பதே உண்மை.

பிரிட்டனில்..
பல காலமாக, இவர்களின் நலன்கள் எதிரும் புதிருமாக இருந்து வந்ததைப் பார்த்திருக்கிறோம். உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தால், அதற்குத் தகுந்தாற்போல் கூலி உயர வேண்டும். கூலி உயராவிட்டால், அது கூலியின் உண்மை மதிப்பினைக் குறைத்து விடும் என்பதிலிருந்து தொடங்கும் முரண்பாடு இது. 19ஆவது நூற்றாண்டில் பிரிட்டன் நாட்டில் தொழிலாளர்கள், தொழில் முதலாளிகளுடன் இணைந்து, தானியச் சட்டத்தை (CORN LAW) ரத்து செய்யக் கோரிபோராடினார்கள். அது நிலப்பிரபுக்களுக்கு எதிரான போராட்டம். பிரிட்டனில், விவசாயிகள் கையிலிருந்த விவசாயம், முழுமையாக நிலப்பிரபுக்கள் பிடிக்கு மாறிவிட்ட காலம் அது. உள்நாட்டில் உணவுப் பொருட்கள் விலை உயர்ந்திருந்த நிலையில், நிலப்பிரபுக்களின் லாபத்தைப் பாதுகாப்பதற்காக, உணவுப் பொருள் இறக்குமதியினை அந்த தானியச் சட்டம் தடை செய்திருந்தது. அந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டமே அது.

இந்தியாவில்….
இந்தியாவில், 1960 இறுதிகளிலும், 1970 தொடக்கத்திலும் இந்திய நிலப்பிரபுக்கள், உபரி விளைச்சல் கொண்ட பெரிய விவசாயிகளின் நிர்ப்பந்தம் காரணமாக உணவுப் பொருள் விலைகள் உயர்ந்துநின்றன. இயல்பாக, அந்த விலை உயர்வு நகர்ப்புறத் தொழிலாளர்களின் உண்மை ஊதியங்களைப் பாதித்தது. இதன் காரணமாக, நகர்ப்புறத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளிகள் என, வேலை நிறுத்தங்கள் வெடித்தன. இதுவே 1974 ரயில்வே வேலை நிறுத்தத்தில் வந்து முடிந்தது. அடுத்த கட்டத்தில் அது அவசர நிலைப் பிரகடனத்திற்கும் வித்திட்டது. இதற்கு நேர் விரோதமான சூழ்நிலையினையும் உலகம் சந்தித்திருக்கிறது. 1930 பெருவீழ்ச்சிக் காலத்தில், வேளாண் பொருள் விலை வீழ்ச்சி விவசாயிகளைத் தாக்கியது. அதே
வேளையில், இந்தியாவில் எந்திரத் தொழிலில் இருந்த தொழிலாளர்களின் உண்மை ஊதிய விகிதம் உயர்ந்ததாக கே. முகர்ஜியின் கட்டுரை (VB சிங் தொகுப்பில் வெளியான ‘இந்தியாவின் பொருளாதார வரலாறு – 1857 – 1956”) கூறுகிறது.

இணைந்தது எவ்விதம்?
இப்படி நேரடி முரண்பாடு கொண்ட இரண்டு வர்க்கங்கள் தில்லியில் இணைந்தது எப்படி? தொழி
லாளர்கள் பெரும்பான்மையாகப் பங்கேற்ற பேரணியில் அவர்கள் முன்வைத்த 15 கோரிக்கைகளில் விவசாயிகளுக்கு உணவு தானியம் உட்பட கொள்முதல் விலை உயர்வு என்பதும் ஒன்று. இதை எல்லாம் எப்படி விளக்குவது? அதற்கான விளக்கத்தில் ஒரு பகுதி அனைவருக்கும் தெரியும். கொள்முதல் மற்றும் பொது விநியோகத்தில் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் நடுவில், அரசு நடு வினையாற்றுகிறது. தொழிலாளர்களை அதிகம் பாதிக்காமலேயே, விவசாயிகளுக்கான கொள்முதல் விலையினை அரசு உயர்த்த முடியும். கொள்முதல் விலையினை உயர்த்தினாலும், உணவு மானியத்தை உயர்த்தி விற்பனை விலையினைக்கட்டுக்குள் வைக்க முடியும். இதன் பயனாக, இவர்களுக்கிடையில் தானிய வியாபாரிகள் இருந்த போதும், விவசாயிகளும் தொழிலாளர்களும் சந்தையில் நேரடியாக மோதிக் கொள்வதைத் தவிர்க்க முடிகிறது.

இரு வகை நோக்கங்கள்!
கொள்முதல் மற்றும் பொது விநியோக முறை இரண்டுவகை நோக்கங்களை நிறைவு செய்கிறது. விலை வீழ்ச்சி உணவு உற்பத்தியாளர்களை தாக்குவதனையும், விலை உயர்வு நுகர்வோரைத் தாக்குவதனையும், உரியஅளவிலான மானியங்களின் துணையுடன் அரசு தடுத்துக்காக்கிறது. இத்தகைய ஏற்பாட்டின் பின்புலத்தில் தான், விவசாயிகளுக்கு கொள்முதல் விலை உயர்வு என்ற கோரிக்கைக்கு ஆதரவாக தொழிலாளர்களைத் திரட்டுவது சாத்தியமாகிறது.

நோக்கங்களைப் புறந்தள்ளினால்..
ஆனால், இதில் இதற்கு மேலும் சில செய்திகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட விற்பனை விலைக்குப் பின்னால் இருக்கும் கொள்முதல் விலையினைக் குறைத்தால், அதாவது உணவு மானியத்தையும், நிதிப்பற்றாக்குறையினையும் குறைத்தால், அது விவசாயிகளின் வருமானத்தைக் குறைத்து, அவர்களது துயரத்தினை அதிகமாக்கி விடும். அவர்களில் பலரைவேலை தேடும்படி நகர்ப்புறங்களுக்கு விரட்டி விடும். நகரங்களிலும் வேலைகள் இல்லாத நிலையில், அவர்கள் நகர்ப்புற வேலை இல்லாப் பட்டாளத்தின் அளவைப் பெருக்குவதற்கு மட்டுமே பயன் படுவார்கள். வேலை இல்லாதவர்கள், தகுதிக் குறைவான வேலையில் இருப்பவர்கள், அல்லது காரல் மார்க்ஸ் குறிப்பிட்டது போன்று “ வேலையில்லா தொழிலாளர்களின் ரிசர்வ் படை” எண்ணிக்கையினைப் பெருக்குவார்கள். இத்தகைய நிலை, வேலையில் இருப்பவர்களின், ஏன் தொழிற்சங்கத்தில் இருப்பவர்களின் பேர சக்தியினைக் கூட பலவீனப்படுத்தி விடும். அவர்களது உண்மை ஊதியம் வீழ்ச்சி அடைந்து விடும்.

இரு தரப்பு உறவுகள்!
வேறு வார்த்தைகளில் கூறப் போனால், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவு, ஏதோஉற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையிலான உறவு போன்றதொரு உறவு அல்ல. விவசாயிகள் ஏழ்மைப்படும் போது உருவாகும் வேலை இல்லா ரிசர்வ்படைக்கும், வேலையில் இருக்கும் தொழிலாளர் படைக்கும் உள்ள உறவு அது. நவீன தாராளவாதம் விவசாயிகளை ஏழ்மையில் தள்ளி வரும் இன்றைய சகாப்தத்தில் இந்த உறவு அதிக அழுத்தம் பெறுகிறது. இன்றைய இந்தியாவில், வேலையில் இருப்பவர் – இல்லாதவர், வேலையில் இருக்கும் படை – ரிசர்வ் படைஎன்ற இருவகை நிலைமைகள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. சிறிது காலம் வேலை இல்லாது இருப்பவர்கள், சிறிது காலம் வேலையில் இருப்பவர்கள், வேலையே கிடைக்காமல் இருப்பவர்கள் என்று பலருக்கும் வேலை என்பதே பல வடிவங்களில் ஒரு ‘ரேஷன்’ சரக்காக மாறி வருகிறது. அவ்வப்போது கிடைக்கும் தற்காலிக வேலைகள், இடைவெளி விட்டு விட்டு கிடைக்கும் வேலைகள், பகுதி நேர வேலைகள், சொந்தக் குறுந் தொழில் (இது வேலையின்மைக்கு மற்றொரு பெயர்). இது தவிர வளர்ந்தோங்கி வரும் ரிசர்வ் படை . மொத்தத்தில் இத்தகைய ஒவ்வொரு பெயர் மாற்றத்திலும் வேலைகள் குறைந்து கொண்டெ வருகின்றன என்பது மட்டுமே எதார்த்தம். மொத்தத்தில், உருவாகும் ரிசர்வ் படை, அனைத்து தொழிலாளர்களையும் வறுமைக்குள் தள்ளி விடும்.

தொடர்ந்த தாக்குதல்கள்!
நவீன தாராளவாதம் சிறு உற்பத்தியை தாக்கி அழிக்கிறது. விவசாயிகளின் விவசாயத்தை அழிக்கிறது, இந்த துறைகளுக்கான அரசு ஆதரவு விலக்கிக் கொள்ளப்படுகிறது. உலகச் சந்தையில் நிலவும் நிலைமைகளையும், உள்நாட்டில் கார்ப்பரேட் வணிக விளைவுகளையும் விவசாயிகள் எதிர்கொள்ள முடிவதில்லை. அதனுடைய ஒரு வெளிப்பாடு தான் விவசாயிகளின் தற்கொலைகள். கடந்த இருபது ஆண்டுகளில் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால், 1991ம் ஆண்டிலிருந்து 2011வரைக்குமான காலங்களில் ஒன்றரைக் கோடிப் பேர் விவசாயத்தை விட்டு வெளியேறி உள்ளனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இந்த எண்ணிகையினர் தான் ரிசர்வ் படையின் அளவினைப் பெரிதாக்கி வருபவர்கள். ஜி.டி.பி பெருமளவில் வளர்ச்சி அடைந்து வந்த 2004-05 முதல் 2009 – 10 வரையிலான காலங்களில் கூட, விவசாயம்அல்லாத துறைகளில் வேலை வாய்ப்பு வளர்ச்சி சுருங்கிப்போய் நிற்கிறது. விவசாயத்திலிருந்து வெளியேற்றப்படுபவர்களுக்கு வேறு துறைகளில் வேலை என்பது வெறும் கற்பனையே.

பேரணி விடுக்கும் செய்தி!
மின்சக்தியில் இயங்கும் தொழில்களில் 10 அல்லது அதற்கு மேல் இருப்பவர்கள், மின்சக்தி இல்லாமல் இயங்கும் தொழில்களில் 20 அல்லது அதற்கு மேற்பட்டதொழிற்சாலைத் தொழிலாளர்களின் உண்மை ஊதியங்கள், 1990 – 91 ஆண்டுகளில் இருந்ததை விட 2012-13 வரையிலான ஆண்டுகளில் குறைவாக உள்ளன என தொழில்களின் வருடாந்திர சர்வே கூறுகிறது. அதே வேளையில் இந்தக் காலத்தில் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் கூடியிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நவீன தாராளவாதத்திற்கும், அது தங்களுக்கு இழைக்கும் அநீதிகளுக்கும் எதிராக தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் ஏன்திரண்டெழுந்தார்கள் என்பது புரிகிறது அல்லவா? தில்லிபேரணி விடுக்கும் மகத்தான செய்தி இது தான்.

தொகுப்பு : இ.எம்.ஜோசப்
நன்றி : தி டெலிகிராப் – 14.09.2018

Leave a Reply

You must be logged in to post a comment.