கோவை,
கோவை மலுமிச்சம்பட்டி அருகே செயல்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் அளித்த புகாரை தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி அருகே தனியார் காஸ்டிங் தொழிற்சாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருசக்கர வாகனங்களுக்கு தேவையான உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம், இந்த ஆலையை சுற்றி ஏராளமான விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. இங்கு, தென்னை, வாழை போன்ற பயிர்கள் பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பயிர்களின் இலைகளிலும், செடிகளிலும் சாம்பல் நிறத்திலான துகள்கள் படிந்து காணப்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளுக்கு சேகரிக்கப்பட்டு இருந்த தீவனங்களிலும் சாம்பல் நிற துகள்கள் படிந்து இருந்தது. இதனை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், காஸ்டிங் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையின் காரணமாக பயிர்கள், தீவனங்களில் சாம்பல் நிற துகள்கள் படிந்துள்ளதாக குற்றம்சாட்டினர்.  இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதில், காஸ்டிங் ஆலையில் இருந்து வெளியேறிய புகையின் காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனியார் ஆலை நிறுவனத்தினர் காற்றுமாசு தடுப்பு சாதனங்களை முறையாக கையாள வேண்டும் என எச்சரித்தனர். மேலும், இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அளிக்கவும், அப்பகுதியில் காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகளின் புகாரை தொடர்ந்து சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு செய்தோம். இதில், அந்த ஆலையில் காற்று மாசு தடுப்பு சாதனங்கள் சரியாக பயன்படுத்தாமல் இருப்பது தெரியவந்தது. மேலும், காஸ்டிங்கழிவுகளை உள்ளேயே கொட்டி வைத்துள்ளனர். இதனால், நுண் துகள்கள் காற்றில் கலந்து அருகிலுள்ள பயிர்கள், வீடுகளில் படிந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக வேளாண் அதிகாரியும் ஆய்வு நடத்தினர். ஆலையில் காற்றுமாசு தடுப்பு சாதனம் குறைபாடு உள்ளது. அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சம்மந்தப்பட்ட ஆலைக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.