திருப்பூர்,
திருப்பூரில் எலக்ட்ரீஷியனை அடித்து கொலை செய்தது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கொலை வழக்கில் கைது செய்தனர்.

திருப்பூர் பொல்லிக்காளிபாளையம் பெருந்தொழுவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 27). எலக்ட்ரீஷியன். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது வீட்டின் அருகே வசித்து வருபவர் ராதா(50). இந்நிலையில் ராதாவின் வீடு புதுப்பிக்கும் பணி நடைபெற்றதை ஒட்டி, அவரது வீட்டில் இருந்த சாமான்களை ஜெயந்தி வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில் பல நாட்களாக அந்த பொருட்களை எடுக்காதது தொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராதா, அவரது 16 வயது மகன் மற்றும் அவரது நண்பர்களான திருப்பூர் ஜெய் நகரை சேர்ந்த இந்து முன்னணி மண்டல பொறுப்பாளர் சிவக்குமார் (30), இந்து முன்னணி நல்லூர் ஒன்றிய செயலாளர் திருவேங்கட நகரைச் சேர்ந்த பாலு (37) ஆகியோருடன் சேர்ந்து ஜெயந்தியிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ் இதை தட்டிக் கேட்டுள்ளார்.

இதையடுத்து நான்கு பேரும் சேர்ந்து வெங்கடேஷை அடித்துக் கீழே தள்ளி விட்டனர். இதில் அருகில் இருந்த கல் மீது விழுந்த வெங்கடேஷூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெங்டேஷின் தம்பி சங்கீத்குமார் அளித்த புகாரின் பேரில், 16 வயது சிறுவன் உள்பட நான்கு பேர் மீது ஊரக காவல் துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிந்து கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேஷ் சுய நினைவை இழந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி சனியன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, மேற்படி குற்றவாளிகள் நான்கு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியனை அடித்துக் கொலை செய்த இந்து முன்னணி நிர்வாகிகளை காப்பாற்றுவதற்கு அந்த அமைப்பின் தலைவர்கள் காவல்துறைக்கு நிர்பந்தம் கொடுத்து வருவதாகவும், ஆனால் குற்றவாளிகளைத் தப்பவிடாமல் தண்டிக்க வேண்டும் என்றும் உயிரிழந்த வெங்கடேஷின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: