வடக்கு தில்லியில் யமுனை நதிக் கரையோரத்தில் உள்ள பகுதி மஜூன் கா டில்லா. நாடு விடுதலையான பிறகு, 1960 களில் உருவான இந்த நகரில் பிறந்த ஹரிஷ் குமாருக்கு வயது 24. சைக்கிள் டயரை கம்பால் உருட்டிச் செல்வதில் கில்லாடி. ஆனாலும் அவருக்குள் ஒளிந்திருந்த திறமையையும் ஆர்வத்தையும் ‘கிக் வாலிபால்’ பயிற்சியாளர் ஹேம்ராஜ் கண்டறிந்தார்.

ஆட்டோ ஓட்டுநரான ஹரிஷ் குமாரின் தந்தை தனது குடிசையின் முன்புறம் சிறிய டீக் கடை நடத்தி வருகிறார். அந்த கடையை குடும்பத்தினர் கவனித்து வருகிறார்கள். அதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தை கொண்டுதான் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். தந்தை ஆட்டோ ஓட்டுவதால் ஹரிஷ் குமார், அவரது சகோதரர் தவாண், அம்மா இந்திரா தேவி மூவரும் டீக் கடையை பார்த்துக்கொள்கிறார்கள்.

டீக் கடையில்….
ஹரிஷ் குமாரின் குடும்ப வறுமையை அறிந்த ஹேம்ராஜ், அவரை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் சேர்த்தார். அங்கு ஹரிஷ் குமாருக்கு தேவையான உணவு, உடை, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மாதாந்திர ஊக்கத் தொகை கொடுத்து உதவிட வழிவகை செய்தார். அதிகாலை முதல் மதியம் இரண்டு மணி வரைக்கும் டீக் கடையில் வேலை பார்த்த ஹரிஷ் குமார், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை விளையாட்டுப் பயிற்சியை மேற்கொண்டார். அப்போது அவருக்கு வயது 17. இதைப் பார்த்த பலரும் கேலியும் கிண்டலும் செய்தனர். இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் தனது முழு கவனத்தையும் ‘கிக் வாலிபால்’ விளையாட்டில் காட்டினார். இதன் விளைவு மிக விரைவில் இந்திய அணியில் இடம் கிடைத்தது.

தூணாக….
ஆட்டோ ஓட்டுநரின் மகனான ஹரிஷ் குமாரை சிறந்த விளையாட்டு வீரனாக உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் பயிற்சியாளர் ஹேம்ராஜ். டீக் கடையில் இருந்து பயிற்சி மைதானத்திற்கு சென்று வர கூட டிக்கெட் எடுப்பதற்கு பணம் இல்லாமல் ரயிலிலும் பேருந்திலும் பயணித்து வந்த ஹரிஷ் குமார், இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது முழு திறமையையும் நிரூபித்து இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்வதற்கு முக்கிய தூணாக திகழ்ந்தார். தங்கள் குடும்பம் வசிக்கும் குடிசைக்குக் கூட வாடகை கட்ட முடியாத சூழ்நிலையிலும் மகனின் படிப்பு, பயிற்சி செலவுகளுக்காக தாய் இந்திராதேவி, தன்னால் முடிந்த வரைக்கும் உதவி செய்ததை பாராட்டுவதற்கு வார்த்தைகளே கிடையாது.

அறிமுகமே அசத்தல்!
கால்பந்து, கைப்பந்து, ஜிம்னாஸ்டிக் என மூன்று விளையாட்டுக்களின் கலவைதான் ‘சிபாக் தக்ராவ்’. கிட்டத்தட்ட கைப்பந்தை போன்றது தான். அதனால் இந்த விளையாட்டை ‘கிக் வாலிபால்’ என்றும் அழைக்கிறார்கள். இந்த விளையாட்டுக்கான மைதானம் வாலிபால் போட்டிக்கானது போல் இருக்கும். கால்பந்தைப் போன்று கால்கள், முட்டி, தலையால் பந்தைத் தட்டி விளையாடுகிறார்கள். அந்த அளவுக்கு கால்களை இதில் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த போட்டியை பார்த்தால் ஜிம்னாஸ்டிக் போன்றும் உள்ளது. இந்த விளையாட்டில் ஹரிஷ் குமார் உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட இந்திய அணி, இந்த ஆண்டுதான் முதன் முறையாக களம் இறங்கியது. அறிமுகத்திலேயே வெண்கலப் பதக்கம் வென்றது. இதற்கு முன்பு வரைக்கும் இந்த விளையாட்டை பெரும்பாலானோர் அறிந்தது கிடையாது.

வரவேற்க ஒருவரும் இல்லை:
கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, தடைகள் பலவற்றை உடைத்து இந்திய அணியில் இடம் பிடித்து மிக கஷ்டமான கட்டத்திலும் விளையாட்டுத் துறையில் சாதித்த ஹரிஷ் குமார் வீடு திரும்பிய போது, அவரை வரவேற்க ஒருவரும் வரவில்லை என்பது விளையாட்டுத் துறையில் அவர் பட்ட கஷ்டங்களை விட மிகவும் வேதனையாகும். ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற கையோடு தாயகம் திரும்பிய அவர், வாழ்க்கையை நடத்த, தந்தை நடத்தி வரும் டீக் கடையில் டீ விற்கும் வேலையை மீண்டும் தொடங்கிவிட்டார். டீக் கடைக்காரர் பிரதமராக இருந்தும் ஹரிஷ் குமாருக்கு அரசு வேலை கொடுக்கவோ, நிதி உதவி செய்யவோ மனம் இல்லாத நிலையிலும் விரக்தியடையாமல், தனது குடும்பத்தின் தேவைக்காக மீண்டும் டீக் கடைக்குச் சென்று வேலை செய்தாலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டை கவுரப்படுத்த, நாள்தோறும் அவர் எடுத்து வரும் பயிற்சியும் முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துவோம்!

Leave a Reply

You must be logged in to post a comment.