புதுதில்லி,
மேக் இன் இந்தியா என நாள்தோறும் முழங்கும் மோடி அரசு, அத்திட்டத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத வாகனங்கள் இறக்குமதியால் உள்நாட்டு தொழிலை அழிப்பதாகவும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

வாகன இறக்குமதிக்கு அரசு வழங்கியுள்ள சலுகையால் உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 2,500 வாகனங்களை எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதியளித்தது. இந்த அனுமதியால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இடையேயான போட்டி ஆரோக்கியமாக இருக்காது. இதுமேக் இன் இந்தியா திட்டத்தின் நோக்கத்துக்கு எதிரானது என்று உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியச் சாலைகளில் வாகனங்கள் இயங்குவதற்குத் தேவையான விதிமுறைகளின் அடிப்படையிலேயே முன்பு வாகனங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது இறக்குமதி மீதான அந்த விதிமுறைகளை மோடி அரசு தளர்த்தியுள்ளது என்பது உள்நாட்டு தொழிலை அழிக்கும் என வாகன உற்பத்தியாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.  இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொது இயக்குநர் விஷ்ணு மாதுர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், வெளிநாட்டில் முழுவதுமாகத் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், இந்திய அரசின் மேக் இன் இந்தியாதிட்டத்துக்கு எதிரானதாகும். இதில் அரசு சரியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் டொயோட்டா, மெர்சிடஸ் பென்ஸ், நிசான் உள்ளிட்ட பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளன என்பதிலிருந்தே இது அவர்களுக்கு மட்டுமே சாதகமானபலனளிக்கும் முடிவு என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.