அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 20 மாதங்களே உள்ளன. அதில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க இப்போதே களமிறங்கிவிட்டனர் இந்திய வீரர்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் தடை மற்றும் தொடர் ஓட்டங்களில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தவருமான தருண் அய்யாசாமியும் அடங்குவார்.

ஊரே திரண்டு…
ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் தொடர் பயிற்சி, விடா முயற்சியால் தனது 21 ஆவது வயதில் அனைவரையும் அசத்தி தன் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தார் அருண். பதக்கம் வென்ற உற்சாகத்தோடு சொந்த ஊர் திரும்பிய அருணுக்கு சாதி, மத, பேதமின்றி ஊரே ஒன்று திரண்டு விழா எடுத்தது. மேளதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து அணிவகுப்புடன் மாணவர்கள் உலாவந்தனர். அரசியல் கட்சித்தலைவர்கள் மலர் கிரீடம் அணிவித்து கவுரவித்தனர். தருண் அய்யாசாமி பிறந்தது, வளர்ந்தது அனைத்தும் ராவுத்தம் பாளையம் கிராமம். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சின்னேரிபாளையம் ஊராட்சியைச் சேர்ந்தது இந்த கிராமம். தருணுக்கு எட்டு வயதுஇருக்கும் போது தந்தை அய்யாசாமி இறந்து விட்டார். தனியார் ஆங்கிலப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிய அவரது தாய் பூங்கொடிதான் தருணை வளர்த்து ஆளாக்கினார்.

சிறு வயது முதல் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால், பள்ளிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வந்தார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், நண்பர்களின் ஊக்கத்தால் பத்தாம் வகுப்பில் ஓட்டப் பந்தயத் திற்கு மாறினார். பயிற்சியாளர் அன்பழகனிடம் முறைப்படி பயிற்சியை துவக்கினார்.

பதக்கவேட்டை!
பள்ளி மாணவர்களிடையே மாவட்ட, மண்டல அளவில் விளையாடி வந்தாலும் தேசிய அளவில் கொல்கத்தாவில் நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில் முதன் முதலாக பதக்க வேட்டையை தொடங்கினார். அதன்பிறகு ஏறுமுகம்தான். 2012-14 ஆம் ஆண்டுகளில் மாநில தடகளத்தில் 200, 400 மீட்டர் ஓட்டங்களில் தொடர்ந்து ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றார். அதோடு 200 மீட்டர் தூரத்தை 21.04 வினாடிகளிலும் 400 மீட்டர் தூரத்தை 48. 06 வினாடிகளிலும் கடந்து சாதனை படைத்தார். தனது 11 ஆவது வயதில் பெடரேஷன் கோப்பையில் கலந்து கொண்டு ஓடினார். அப்போது முறை பதக்கம் கிடைக்கவில்லை என்றாலும் 2015 ஆம் ஆண்டு பெங்களூரில் 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இரண்டிலும் வெண்கலப் பதக் கம் வென்று முத்திரைப் பதித்தார். அடுத்த ஆண்டே, கவுகாத்தியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் மற்றும் குழுப் பிரிவில் முதலிடம் பிடித்து ‘கோல்டு மெடல்’ வென்று திறமையை நிரூபித்தார்.

காயமும் காய்ச்சலும்
2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் கில் வெறும் கையோடு நாடு திரும்பினார். அந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள், பயிற்சின்போது காலில் ஏற்பட்ட காயத்தால் எழுந்து நடக்க கூடமுடியாதநிலை ஏற்பட்டது. ஆனாலும் சோர்ந்து போகவில்லை. சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினார். தொடர் பயிற்சியின் மூலம் மீண்டும் ஓடத் துவங்கினார். கடந்த மார்ச் மாதம் நடந்த 22 ஆவதுபெடரேஷன் கோப்பைக்கு தயார் நிலையிலிருந்த போது, திடீர் காய்ச்சலால் அவதிப்பட்டார். அதிலிருந்து விரைவாக மீண்டு களத்தில் இறங்கினார். 400 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தாலும் மனம் தளரவில்லை.

400 மீட்டர் தடை
தாண்டும் ஓட்டத்தில் இலக்கை நோக்கிபாய்ந்து ஓடினார். பந்தயத் தூரத்தை 19.45 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து, கேரளாவின் ஜோசப் ஆப்ரஹாமின் சாதனையை 11 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்து தேசிய அளவில் வரலாறு படைத்தார். ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறமையுடைய வீரர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரும் மாநில அரசின் ‘‘எலைட்ஸ்கீம்’’ திட்டத்தில் அருண் சேர்க்கப்பட்டாலும் மாநில அரசின் சலுகை கிடைக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் அவர் படித்து வரும் கல்லூரி நிர்வாகம்தான் நிதியுதவி செய்து வருகிறது. தனது கடின உழைப்பு, மனஉறுதி, விடா முயற்சியால் ஆசிய விளையாட்டில் பந்தயத் தூரத்தை 48.96 வினாடிகளில் கடந்து,அவரது சாதனையை அவரே முறியடித்தார்.

400 ரூபாய் ஷூ… இந்த வெற்றிக்கு பிறகு தனியார் தொலைக்காட்சிகளுக்கு கொடுத்த பேட்டியில், ‘‘ஓட தொடங்கிய ஆரம்ப காலத்தில் 400 ரூபாய்க்கு வாங்கிய ‘ஷூ’ கிழிந்துவிட்டது. புதிதாக வேறுஒரு ‘ஷூ’ வாங்கக்கூட முடியாத எனது அம்மா, தெருவோர செருப்பு தொழிலாளியிடம் தைத்து கொடுத்ததை போட்டுக் கொண்டு ஓடியது இப்போதும் என் நினைவில் நிற்கிறது’’ என்றார்.

வேலை முக்கியமல்ல!
விளையாட்டு வீரர்கள் யாருமே வலியில்லாமல் உருவாகிட முடியாது. ஒருசிற்பம் கூட சிற்பியால் செதுக்க செதுக்கத் தான் அழகும் பொலிவும் தரும். அதுபோன்றுதான் விளையாட்டிலும் பயிற்சி எடுக்க எடுக்கத் தான் உயரத்தை எட்ட முடியும். முழங்காலில் ஏற்பட்ட காயத்தின்போது நான் துடித்தவலியும் பட்ட கஷ்டமும்தான் இன்றைக்கு இந்த உயரத்திற்கு என்னைஉயர்த்தியிருக்கிறது. அரசு பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், இப்போது போட்டி போட்டுக்கொண்டு எனக்கு வேலை கொடுக்க முன்வருகிறார்கள். ஆனால், எனக்கு வேலை முக்கியமல்ல. ஓட்டப் பந்தயத்தில் மேலும் சாதிக்க வேண்டும். அதற்காக என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறேன் என்கிறார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற அவரது லட்சியம் நிறைவேற நாமும் வாழ்த்துவோம்!

Leave a Reply

You must be logged in to post a comment.