கோவை,
அரசு மருத்துவமனைகளுக்கு பக்கவாதத்தால் அபாய கட்டத்தில் வரும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தை வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக சுகாதார துறை சார்பில் விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர பராமரிப்பு முயற்சி (டி.ஏ.இ.ஐ.) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி விபத்தில் சிக்குபவர்கள் தவிர மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மாநிலத்தின் தலைநகரங்களில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் மையமாக உள்ள மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு பிரத்யேக மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் வரும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தான அல்டிப்ளேஸ் எனும் விலை உயர்ந்த மருந்தை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறியதாவது: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆறு மணி நேரத்துக்குள் வரும் நோயாளிகளுக்கு அல்டிப்ளேஸ் என்ற விலை உயர்ந்த மருந்து செலுத்தப்படுகிறது. இதன் மூலம் மூளையில் உறைந்திருக்கும் ரத்தம் கரைந்து ரத்த ஓட்டம் சீராகும். ஆறு மணி நேரத்துக்கு மேல் வரும் நோயாளிகளுக்கு இம்மருந்தை செலுத்துவதால் பயனில்லை. இம்மருந்தின் விலை ரூ.36 ஆயிரம். நோயாளிகளின் சிகிச்சைக்காக இம்மருந்தை தற்போது இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: