எல்லாம் மதங்களும் அன்பையே போதிக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் ஒருசிலர் அவற்றிற்கு நேரெதிராக செயல்படுகிறார்கள். பொங்கு பல சமயமெனும் நதிகளெல்லாம் புகுந்து கலந்திடும் கங்குகரை காணாத கடலே என்று இறைவனை புகழ்கிறார்கள். ஆனால் அந்த இறைவனின் பெயரால் சிலர் வன்முறைகளிலும் கலவரங்களிலும் ஈடுபடுகிறார்கள். பொதுவாக மக்கள் தங்கள் அண்டை அயலாருடன் அவர்கள் பிற மதங்களைச் சேர்ந்தவர்களாயினும் இணக்கமாகவும் நட்புடனும் உறவாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்துத்துவா மத வெறியர்கள் வழிபாடுகள் என்ற பெயரில் வன்முறையை விதைக்கிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றாலும் நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புடன் ஒரு சில இடங்களில் கலவரத்தை ஏற்படுத்தும் எண்ணத்துடனேயே நடத்தப்படுகின்றன. அதற்கு நெல்லை மாவட்டம் செங்கோட்டையே சாட்சி. புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் பாஜக தலைவரான எச்.ராஜாவே நேரடியாக களத்தில் இறங்கி காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டு பிரச்சனையை ஏற்படுத்தியதும் காவல்துறையையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் பேசியதையும் தமிழகம் கண்டிருந்தது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள பெரியகுளம் கிராமத்தில் முஸ்லிம் மக்களின் மொகரம் பண்டிகையை இந்து மக்களும் தீ மிதித்து கொண்டாடியுள்ளனர். அதில் ஆண்களும் சிறுவர்களும் கையில் பச்சை, வெள்ளை பிறைக் கொடியையேந்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். பெண்கள் தங்கள் தலையில் முக்காடிட்டு தீக்கங்குகளை அள்ளிக் கொட்டி பூ மெழுகுதல் என்ற பெயரிலான நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர்.  இது பல ஆண்டு காலமாக நடந்துவருகிறது என்றும் சமய நல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழ்கிறது என்றும் நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய அன்பின்வெளிப்பாடுகளே எல்லா மக்களிடமும் நிறைந்துள்ளன. ஆயினும் மதமாச்சரியங்களுடனும் வெறியுடனும் நடந்துகொள்ளும் இந்துத்துவா கூட்டத்தினராலேயே, அன்பை போதிக்கும் விநாயகர் ஊர்வலம் கூட வம்பை விதைக்கும் விழாவாக மாற்றப்படுகிறது.

பொதுவாக இந்துக்களின் கோவில் திருவிழாக்கள் எல்லாம் நாள் கணக்கில், வாரக்கணக்கில் கூட நடைபெறுகின்றன. அப்பொழுதெல்லாம் எந்த அசம்பாவிதங்களும் வன்முறைகளும் நடைபெறுவதில்லை. ஆனால் முன்பு சிறு,சிறு நிகழ்வாக பெரும்பாலும் சின்னஞ்சிறார்கள் பங்கேற்ற பிள்ளையார் சதுர்த்தியை தற்போது பெரும் நிகழ்வாக மாற்றியே வன்முறைக்கு வித்திடுகிறார்கள். இந்து மதவெறியைத் தூண்டி கலவரத்திற்கு களம் அமைக்கிறார்கள். என்றாலும் தமிழக மக்கள் பொதுவாக பிற மதத்தினரோடு இணக்கமாகவும் நட்பாகவுமே வாழ்ந்து வருகிறார்கள். அதனுடைய வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இராமநாதபுரம் உதாரணம். இத்தகைய மத நல்லிணக்கத்தை குலைக்க விரும்பும் மதவெறிக் கும்பலை பொது நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்திடுவோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.