===கே.விஜயன்===
தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை உள்ளதாகவும் ஆனால் மின்வெட்டு இல்லை என்றும் அதற்கு காரணம் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே என்றும் தமிழக முதல் அமைச்சர் கவலைப்பட்டு மத்திய அரசிற்கு கடிதம் எழுதி உள்ளார். ஆனால் கடிதம் மத்திய அரசுக்கு சென்று சேருவதற்குள் நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய தமிழக மக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் கிடைத்திட முடிவு எடுத்துள்ளது. அது மட்டுமல்ல காற்றாலை மின்சாரம் திடீரென்று நின்று விட்டதால் வெளியிலிருந்து மேலும் 1500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

அனல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். 3 நாட்களுக்கு மட்டும் நிலக்கரி உள்ளது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் (600 மெகாவாட்) நிலக்கரி இல்லாமல் உற்பத்தி நின்று விட்டது. அதனால் மின்சாரம் இல்லாமல் தமிழகம் தத்தளிக்கப்போகின்றது என்று அபாயச்சங்கு அரசினால் ஊதப்பட்டது. ஆனால் அறிவித்த இரண்டே நாளில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து மேட்டூருக்கு வெளிநாட்டு நிலக்கரி வந்துவிட்டது. இது எப்படி நடந்தது? தில்லிக்கு சென்று தமிழக அமைச்சர் மத்திய அமைச்சர் பியூஷ்கோயலை சந்திப்பதற்கு முன்னரே வெளிநாட்டு நிலக்கரி வந்துவிட்டது. அதற்கு காரணமாக இருந்த அதானியின் தேசப்பற்று மெய்சிலிர்க்க வைக்கின்றது. மின்நிலையத்திற்கு வழங்கவேண்டிய நிலக்கரியை தொடர்ந்து தரவேண்டும் என்று கேட்கச்சென்ற அமைச்சரிடம் 72 ஆயிரம் டன் நிலக்கரி வழங்குவதற்கு உத்தரவாதம் அளித்த செய்திகள் வருவதற்கு முன் வெளிநாட்டு நிலக்கரி வந்து விட்டது.

வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதி செய்வதில் மிகுந்த ஆர்வம் தமிழக அரசிற்கு உள்ளது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த பொழுது 2016 ஆம் ஆண்டில் எகனாமிக் பொலிட்டிகல் வீக்லியில் வந்த செய்தி குறிப்பிடத்தக்கது. அப்பொழுது இந்தோனேசியாவில் ஒரு மெட்ரிக் டன் 6 ஆயிரம் வெப்ப சக்தி உள்ள நிலக்கரியின் விலை 37 அமெரிக்க டாலர் என்றால் கப்பலில் ஏற்றக்கூடிய செலவு எல்லாம் சேர்த்து 50 முதல் 52 டாலர் தான் மொத்த விலையாக இருந்தது. ஆனால் அதே நிலக்கரி கப்பல் மூலம் தமிழகத்திற்கு வரும்போது 80 முதல் 82 டாலராக மாற்றப்பட்டது. இந்த பணியில் அதானியின் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி நிலக்கரி விலையை உயர்த்துவதன் மூலம் இந்திய அரசிற்கு ஏற்பட்ட அன்னியச்செலவாணி வருமான இழப்பை கண்டுபிடிக்கும் துறையான DRI நடவடிக்கை எடுத்து அந்த வழக்கு மும்பையில் நடந்து வருகின்றது. தமிழகத்திற்கு தான் அதிக நிலக்கரி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தமிழக மின்வாரியமும் உள்ளது. காங்கிரஸ் கட்சியும் நிலக்கரி இறக்குமதி செய்வதில் 29 ஆயிரம் கோடிரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் நிலக்கரி இறக்குமதியை குறைத்துவிடுவேன் என்றார். ஆனால் வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி குறையவில்லை. 14 கோடி மெட்ரிக் டன் ஆக இருந்த வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதி 16 கோடி ஆக உயர்ந்துள்ளது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை 100 கோடி மெட்ரிக் டன் ஆக உயர்த்துவேன் என்று சொன்னதும் நடக்கவில்லை. ஒன்று மட்டும் நடக்கின்றது.தனியாருக்கு நிலக்கரி சுரங்கத்தை கொடுப்பதற்கான ஏற்பாடு நடக்கின்றது. நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததால்தான் காங்கிரஸ் ஆட்சி தூக்கி எறியப்பட்டது.

பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தியை அதிகப்படுத்தும் என்று முடிவு செய்த மோடி அரசு தனியாருக்கு சுரங்கங்களை ஒதுக்குவது தீவிரமாகயுள்ளது. மாற்றப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் நிலக்கரி சுரங்கத்தை ஏலம் எடுக்கலாம். நிலக்கரி விலை குறையவேண்டுமென்றால் ஒப்பந்தத் தொழிலாளரை வைத்து உற்பத்தி செய்தால் தான் முடியும் என்று சுரங்கத்தை தனியாருக்கு விடுவதற்கு நியாயப்படுத்தியது. சுரங்கத்தை தனியாரிடம் விட்டால்தான் விலைகுறைவு சாத்தியம் என்று உழைப்புச்சுரண்டலை முன்வைத்தது.

2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசிற்கு மத்திய அரசு வேண்டுகோள் வைத்தது. இனி வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதி செய்யவேண்டாம். மத்திய அரசே வெளிநாட்டுக்கு இணையான வெப்பசக்தி உள்ள நிலக்கரியை ஆந்திர மாநிலம் சிங்கரேணி சுரங்கத்திலிருந்து வழங்கும் என்றது.

2016 ஆம் ஆண்டிற்கு 10 லட்சம் டன் நிலக்கரி உடனடியாக அளிப்பதாகவும் அடுத்த ஆண்டுகளில் 30 லட்சம்டன் நிலக்கரி வழங்கிடவும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் போட்ட முதல்வரும் இறந்துவிட்டார். அத்தோடு ஒப்பந்தமும் இறந்து விட்டது.
குறைந்த அளவில் மட்டுமே நிலக்கரி மத்திய அரசால் ஆந்திராவிலிருந்து வழங்கப்பட்டது. தமிழக அனல் மின்நிலையங்களுக்கு 260 லட்சம் டன் நிலக்கரி ஒரு ஆண்டிற்கு தேவை என்றால் 200 லட்சம் டன் தான் மத்திய அரசு வழங்குகின்றது.

இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டிற்கு முன்னர் மத்திய அரசு கோல் இந்தியா மூலம் 65 சதம் தான் தன்னால் வழங்கமுடியும் என்றும் மீதியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்ற நிலை இருந்தது.

மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிலக்கரி இறக்குமதி தேவை இல்லை. உற்பத்தியை அதிகரித்து விடுகின்றோம் என்றது. ஆனால் இந்த 4 ஆண்டுகளில் நிலக்கரியை உற்பத்தி அதிகரிப்பு போதுமானதாக இல்லை. எல்லாம் தமிழக அரசிற்கு தெரிந்தும் ஏன் இப்பொழுது டெல்லிக்கு காவடி எடுக்கின்றார் தமிழக அமைச்சர்?

பற்றாக்குறை வருவதற்கு இதற்கு முன்னரே நிலக்கரி கொண்டுவருவதற்கு அமைச்சர் ஏற்பாடு செய்திருக்கவேண்டும். காற்றாலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனல் மின்நிலையங்கள் முழுமையாக இயங்கவேண்டும் என்பது அத்தியாவசியம் ஆகும். காரணம் தனியாரிடமிருந்து தமிழக அரசு தொடர்ந்து மின்சாரம் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றது.அப்படியிருக்கும் போது ஏதோ இன்றைக்குத் தான் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு விட்டதாக கூப்பாடு போடுவது எதற்காக?

தமிழ்நாடு மின்வாரியம் கூடுதலாக 1500 மெகாவாட் மின்சாரத்தை வாங்கவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு எவ்வளவு தூரம் சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளமுடியும். தமிழகத்தில் உள்ள ஏழு தனியார் மின்நிலையங்களில் 5 அனல் மின்நிலையங்களில் 700 மெகாவாட் மின்சாரத் திறன் உள்ளது. அவற்றில் இன்னும் ஒப்பந்தம் முடிவடையவில்லை. ஆனால் இப்பொழுது இந்த அனல் மின்நிலையங்களிலிருந்து 130 மெகாவாட் மட்டும் தான் வாங்கப்படுகின்றது. அந்த மின்நிலையங்களிலிருந்து மின்சாரம் வாங்கவில்லை என்றாலும் மின்வாரியம் 716 கோடி ரூபாயை 2015-16 ஆம் ஆண்டில் வழங்கியிருக்கிறது. இது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்டபொழுது, அளிக்கப்பட்டத் தகவலாகும். தொடர்ந்து இந்த தொகை தனியார் மின்உற்பத்தி நிலையங்களுக்கு, மின்சாரம் வாங்கவில்லை என்றாலும் வழங்கப்படுகின்றது. இது ஒப்பந்தம் என்ற பெயரால் நடக்கும் சீர்கேடுதானே?

அடுத்து எண்ணூரில் ஒரு அனல் மின்நிலையம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 600 மெகாவாட் மின்உற்பத்தியை துவக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்பணி இன்னும்பாதி கூட முடியவில்லை. கட்டுமானப்பணியை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் திவாலாகி விட்டது. மின்துறை அமைச்சரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபொழுது வேறு ஒரு நிறுவனத்தை தேடிக்கொண்டு இருக்கின்றோம் என்று சொல்லி ஒரு வருடம் ஆகிவிட்டது.
ஆண்டு தோறும் தமிழகத்தில் மின்தேவை கூடிக்கொண்டே போகின்றது. ஆனால் தமிழக அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிகை மின்மாநிலம் என்று வானுயரத்தில் சென்று கூவிக்கொண்டே இருப்பது தான் அரசின் வேலையாக இருக்கின்றது.

கடன் வாங்கி பணக்காரன் ஆனது போன்று ஒரு மெகாவாட் மின்சாரம் கூட 2011 ஆம்ஆண்டிற்கு பின்னால் கூடுதலாக, உற்பத்தி செய்யாமல் வெளியிலிருந்து 3800 மெகாவாட் மின்சாரம் வாங்கி மிகை மின் மாநிலம் என்று கூறுவது வேடிக்கைதான். 2011 ஆம் ஆண்டிற்கு முன்னர் திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்ட திட்டங்கள் உற்பத்திக்கு வந்ததை வைத்து ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கும் அதிமுக மக்கள் நலன் மறந்த அரசாக உள்ளது. மின்வாரியத்தை சீர்கேடு நிறைந்ததாக மாற்றி வருகின்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.