டேராடூன்

ஆக்சிஜனை உள்ளிழுத்து, அதே வாயுவை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு தான்  என்று உத்தரகாண்ட் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா சர்ச்சைக்கருத்தை தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான ஆட்சிக்கு வந்ததில் இருந்து பசுமாட்டை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் சங் பரிவார அமைப்புகள் அக்லக் தொடங்கி பல கொலைச்சம்பவங்களை நடத்தி உள்ளனர். பசு பாதுகாவலர்கள் என்ற அமைப்பும் உருவாக்கி சிறுபான்மையினரை மிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது, மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்,  மாநில, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா, பசு மாட்டை ராஜ மாதாவாக அறிவிக்க கோரி தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி, `ராஷ்ட்ர மாதா’ அதாவது பசு நாட்டின் தாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் ரேகா ஆர்யா,  ‘ஆக்சிஜனை உள்ளிழுத்து, அதே வாயுவை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு தான். பிறந்த பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு பிறகு அறிவியல் பூர்வமாக கருதப்படுவது பசுவின் பால் தான். பசுவின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துள்ளனர். பசுவின் உடலில் 33 கோடி தேவதைகள் இருப்பதாக முன்னோர்கள் கூறினர்.   இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் பசு வதை தடுக்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.