தூத்துக்குடி;
தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்குழுவைச் சார்ந்த வழக்கறிஞர் விமல் ராஜேஷ் மற்றும் ஸ்டீபன் தாஸ், துரைபாண்டியன் ஆகியோர் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய குழுவினர் தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ள தூத்துக்குடி வருகை தர உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி, அந்த ஆலை அகற்றப்பட வேண்டும்.

அதே நேரத்தில், அந்த ஆலை மூடப்பட்ட பின்னரும் அனல்மின் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடங்கள் பலவற்றில் காற்றுடன் மாசு புகைமண்டலம் படிந்து துர்நாற்றத்துடன் மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படியென்றால் சுற்றுச்சூழல் மாசடைய இன்னும் பல தொழிற்சாலைகள் காரணமாக உள்ளதாக கருத வேண்டியுள்ளது. எனவே, மத்திய ஆய்வுக்குழுவினர் தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறும் மாசுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டால்தான் மாசற்ற மற்றும் மக்கள் சுகாதாரமாக வாழக்கூடிய சுற்றுச்சூழல் ஏற்படும்.

நம் தூத்துக்குடி மக்களின் நோக்கம் மாசு கழிவுகள் அறவே இல்லாத நகரமாக மனிதர்கள் வாழத் தகுதியான நகரமாக இருக்க வேண்டும் என்பதுதான். மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. எனவே, மத்தியக் குழுவினர் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் தியாகத்துக்கு பரிகாரமாக தூத்துக்குடி நகரின் நிலம், நீர், காற்று அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி மத்திய ஆய்வுக் குழுவிடம் மனு அளிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.