சேலம்,
ஜனநாயக உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றன.

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ் உள்ளிட்ட முற்போக்கு மற்றும் பகுத்தறிவு சிந்தனையாளர்கள் சமீபத்தில் இந்துத்துவ மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள் எனகுற்றம்சாட்டப்பட்டு கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக, தலித் மற்றும் இடதுசாரி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் ஆளும் அரசுகளால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோல், தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை போல் கருத்துரிமை, ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகிறது. இவ்வாறு ஜனநாயக உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன்ஒருபகுதியாக சேலம் மாநகரம் வடக்கு மாநகரக் குழு சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதன்படி கோட்டை பகுதியில் டி.வரதராஜன் தலைமையிலும், சத்திரம் பகுதியில் ஆர்.பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன் தலைமையிலும், நால் ரோடு பகுதியில் பி.அண்ணாதுரை, பெரம்மனூர் பகுதியில் எம்.தனிகைவேலன், குட்டத்தெருவில் பி.சின்னதுரை, அஸ்தம்பட்டியில் எம்.பரமசிவம், கோரிமேட்டில் எ.நடராஜன், சின்னதிருப்பதியில் த.மணிமுடி, கோர்ட்ரோடு பகுதியில் ஏ.பி.கோவிந்தன் தலைமையிலும் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றன. இதில் மாநகர செயலாளர் எம்.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.பிரவின்குமார் மற்றும் மாநகரக் குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி:
நீலகிரி மாவட்டம், எருமாடு பஜாரில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாவட்டசெயலாளர் வி.ஏ.பாஸ்கரன் துவக்கி வைத்தார். எருமாடு பகுதிச் செயலாளர் கே.ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜ்குமார், டி.கே.பிலிப், எம்.ஏ.ஷவுக்கத்தலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கோவை
கோவை சின்னியம்பாளையத்தில் வியாழனன்று நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் துவக்கி வைத்தார். இதில் சூலூர் தாலுகா செயலாளர் எஸ்.ஆறுமுகம் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று, ஜனநாயக உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டித்து உரையாற்றினர்.

Leave A Reply

%d bloggers like this: