ஈரோடு,
நூல் விலை உயர்வு காரணமாக இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழை, எளியமக்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது இலவச வேட்டி, சேலைகள் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இதனால் பல லட்சக்கணக்கான விசைத்தறி நெசவாளர்கள் குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர். நடப்பாண்டு இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.520 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகம் முழுவதும் 1.50 கோடி சேலை, 1.50 கோடி வேட்டி உற்பத்தி செய்ய ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான தயாரிப்பு பணி ஈரோடு, திருப்பூர், கோவை,திருச்செங்கோடு, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 46 விசைத்தறி கூடங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் இலவசவேட்டி, சேலை தயாரிக்கப்படுகிறது. இந்த உற்பத்தி பணிகள் அனைத்தும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நூல் விலை கடந்த சில வாரங்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதில் நூல் கொள்முதல் செய்ய அரசு டெண்டர் தொகையாக கிலோவிற்கு 161 ரூபாயை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தற்போது பல்வேறு ரக நூல்கள் விலை உயர்ந்து வெளிமார்க்கெட்டில் நூல் 180 ரூபாய் முதல் 200ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இதில் அரசு நிர்ணயம் செய்த நூல் விலை 20 ரூபாய் வரை அதிகரித்து தற்போது 181 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதன்காரணமாக செப்டம்பர்மாத உற்பத்திக்காக தமிழகம் முழுவதும் 350 டன் வரத்தாக வேண்டிய நூல், தற்போது 125 டன் நூல் மட்டுமே வரத்தாகியுள்ளன. இதில் ஈரோட்டிற்கு 40 டன், திருச்செங்கோட்டிற்கு 40 டன்,கோவைக்கு 10 டன் என மீதமுள்ளநூல்கள் விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் குறைந்தளவிலான நூல்கள் வந்துள்ளதால் இலவச வேட்டி, சேலை தயாரிப்பு பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அதிகாரிகள் கூறியதாவது, நடப்பாண்டு, 1.50 கோடி வேட்டி, 1.50 கோடி சேலை உற்பத்தி செய்ய, ரூ.520 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 46 விசைத்தறி சொசைட்டிகள் மூலம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நூல் விலை உயர்வின் காரணமாக, அரசு நிர்ணயித்த டெண்டர் விலையில் நூல்களை கொள்முதல் செய்ய முடியவில்லை. இதனால் உற்பத்திபணிகள் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனைக்கு இன்னும் சில நாட்களில் தீர்வு காணப்பட்டு விடும். டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து உற்பத்தி பணிகளும் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.