சேலம்,
உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி சேலம் அருகே எட்டு வழிச் சாலைக்காக மண் பரிசோதனை செய்வதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சுற்றுசுழல் துறையினரிடம் இருந்து உத்தரவு வரும் வரை சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழி சாலை திட்ட பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என்று சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இந்நிலையில், இந்த உறுதிமொழியை மீறி வெள்ளியன்று சேலம் அருகே சருகுமலை பகுதியிலுள்ள தேன்மலையில் சுரங்க பாதை அமைத்திட மலையின் மீது பெரிய இயந்திரங்களை நிறுவிமண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்ற உத்தரவையும் மீறி நடைபெறும் மண் பரிசோதனை குறித்த தகவல் அறிந்த விவசாயிகள் மற்றும் எட்டு வழி சாலையால் பாதிக்கப்படவுள்ள பொதுமக்கள், சம்மந்தப்பட்ட மலைக்கு நேரில் சென்று மண் பரிசோதனை நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, மண் பரிசோதனை இயந்திரங்களை சிறைபிடித்தனர். மேலும் அங்கு பணியில் இருந்தவர்களிடம், நீதிமன்ற உத்தரவையும் மீறி பணிகள் மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மண் பரிசோதனை நடைபெறும் பகுதியில் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். இதன்பின் மலையில் இருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அங்கிருந்து காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து அங்கிருந்து கீழே வந்த விவசாயிகள், நீதிமன்ற உத்தரவையும் மீறி தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற அத்துமீறல் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள்மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: