கோவை,
பெண்களின் பாதுகாப்பிற்கு எதுவும் செய்யாத மத்திய அரசு, முஸ்லிம் சமூக மக்களின் மீதான குரோத மனோபான்மையுடன் முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், முத்தலாக் குறித்த அவசர சட்டத்தை மத்திய பாஜக அரசு அவசர கோலத்தில் நிறைவேற்றியுள்ளது. மாநிலங்களவையில் எதிர்ப்பினால் நிறைவேற்ற முடியாததை அவசர சட்டமாக்கியிருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இச்சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பை தராது. பெண்களின் பாதுகாப்பிற்கு எதுவும் செய்யாத மத்திய அரசு, முஸ்லிம் சமூக மக்களின் மீதான குரோத மனோபான்மையுடன் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என தெரிவித்தார். மேலும், நீதிமன்றத்தையும், காவல்துறையையும் இழிவுபடுத்திய எச்.ராஜாவை உபா சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் ஊழலில் திளைக்கின்றனர். 100 சதவிகிதம் ஊழல் ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியுள்ளது. ஊழல் விசாரணைகள் முறையாக நடைபெற அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.