===சி. ஸ்ரீராமுலு===                                                                                                                                                           தில்லியில் புகழ்மிக்க ஜவஹர்லால் நேரு பல்கலை மட்டுமின்றி தில்லிப் பல்கலைக்கழகமும் உள்ளது. இங்கும் சில தினங்களுக்கு முன்பு மாணவர் பேரவைத் தேர்தலில் தலைவராக அங்கிவ் பசோயா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பைச் சார்ந்தவர்.

இந்த தேர்தலில் வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்த ஏபிவிபி அனைத்து பதவிகளையும் கைப்பற்றியது அம்பலமானது. இந்த மோசடிக்காகவே வாக்கு எந்திரம் தனியாரிடம் கொள்முதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையமும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது. இந்தத் தேர்தல் முறைகேடு குறித்து தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதுஅதிர்ச்சியானது அல்ல; உண்மையில் அதிர்ச்சிச் சம்பவம் என்னவென்றால், தில்லி பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்பில் சேர்ந்துள்ள மேற்படி அங்கிவ் பசோயா, வேலூரிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டம் பெற்றதாக சான்று கொடுத் துள்ளார். இந்த சான்று போலியானது என்று காங்கிரசின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் யூனியன் புகார் தெரிவித்தது. இது குறித்த சர்ச்சை நாடு முழுவதும் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக் கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அங்கிவ் பசோயா தங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்றும் அந்த சான்றிதழ் போலியானவைதான் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஏபிவிபி மாணவர் அமைப்பும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கொடுத்த சான்றிதழை ஆய்வு செய்துதான் தில்லி பல்கலைக்கழகம் எம்ஏ சீட் வழங்கியதாக சப்பைக்கட்டு கட்டியுள்ளனர்.

இதில் எது உண்மை என்று புலனாய்வில் இறங்கிய போதுதான், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவருகின்றன.

எங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கவே இல்லை. இது நாங்கள் கொடுத்த சான்றிதழே கிடையாது என்று மத்திய அரசின் மானியத்துடன் நடந்துவரும் பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரியே உண்மையை போட்டு உடைத்த பிறகு அம் மாணவனை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாதது ஏன்? இந்த விஷயத்தில் காவல்துறையின் கைகளை கட்டியது யார்?

போலிச் சான்றிதழ் கொடுத்த மாணவனுக்கு பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கும் பாஜகவும் அதன் துணை அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் எடப்பாடி அரசும் வேடிக்கை பார்ப்பதன் மர்மம் என்ன? அதற்கு இதோ விடை!

என்ன நடக்கிறது திருவள்ளுவர் பல்கலையில்?
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 41 பேராசிரியர்கள், 43 ஊழியர்கள் பணியில் உள்ளனர். 58 பேர் ‘அவுட்சோர்சிங்’ முறையில் ஒப்பந்த தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் ஏற்கெனவே பணியாற்றி வந்த 66 தொழிலாளர்களை பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்ததுதான். இதை எதிர்த்து தொழிலாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், நீதிமன்றம் 66 தொழிலாளர்களுக்கும் வேலை தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், நிர்வாகமும் அதை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்தது. இரண்டாவது முறையாகவும் 66 தொழிலாளர்களுக்கும் கட்டாயம் வேலை தரவேண்டும், இல்லை என்றால் சம்பளம் கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ள மறுத்த நிர்வாகம், மாதாமாதம் சம்பளம் வழங்க ஒப்புக்கொண்டது. இதன் பின்னணியில் பெரும் ஊழல் பூதமே ஒளிந்திருப்பதைப் போட்டு உடைக்கிறார் பல்கலைக் கழக தொழிலாளர் சங்க கவுரவத் தலைவர் இளங்கோவன்.

இவர் வேலூர் ஊரீஸ் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் சுமார் 36 ஆண்டுகாலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பல்கலைக்கழக கல்விக்குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இவர் கூறும் விபரங்கள் தலை சுற்ற வைக்கின்றன.அந்த விபரங்கள் இதோ:

பிஏவுக்கு 7 ஆயிரம், எம்ஏவுக்கு 10 ஆயிரம்!
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து அசோகன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து தேர்வுத் துறையில் எண்ணற்ற முறைகேடுகள் நடந்துள்ளன. ஒவ்வொரு பருவமுறைத் தேர்வின்போதும் பல கோடி ரூபாய் ஊழல் கரை புரண்டு ஓடுகிறது.

இளங்கலை பாடப்பிரிவு தாள் ஒன்றுக்கு ரூ. 7,000, முதுகலை பாடப் பிரிவு தாள் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரம் கொடுத்தால் தேர்வில் வெற்றி பெற்றதாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கி விடுவார்கள்.
உதாரணத்திற்கு, இந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் வெளியான தேர்வு முடிவில் பல அதிர்ச்சி தரும் விபரங்கள் அம்பலமாகின. ஒரு மாணவர் இளங்கலை பாடப்பிரிவில் 23 தாள்கள் தேர்வு எழுதினார். அதில், 17 தாள்கள் தேர்ச்சி பெற்றுள்ளார். இவை அனைத்தும் ஆங்கில இலக்கியப் பாடமாகும். மேலும், தேர்ச்சி பெறாத 6 தாள்களில் 3 தமிழ் பாடமாகும்.

மற்றொரு மாணவர் 19 தாள்கள் தேர்வு எழுதி 18 தேர்ச்சி பெற்றிருக்கிறார். 15 தாள் எழுதிய மாணவர்களில் இரண்டு பேர் முழுமையாகவும், 13 தாள்கள் தேர்வு எழுதிய 3 மாணவர்களும், 12 தாட்கள் எழுதிய 3 மாணவர்களும் முழுமையாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 15 முதல் 12 தாங்கள் எழுதிய 11 மாணவர்கள் ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்தனர். மற்ற அனைத்து தாள்களிலும் தேர்ச்சி பெறச் செய்திருக்கிறார்கள். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த மாணவர்களுக்கு அவர்கள் படித்த கல்லூரி ஆசிரியர்கள் தரகர்கள் மூலம் பல்கலைக்கழகத்தின் சில பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் கல்விக் குழு, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்போடு பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் இந்த முறைகேடு நடந்துள்ளது. இதற்கு பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில் என்பவர் முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். இதற்காகத்தான் நிரந்தர ஊழியர்கள் 66 பேரை பணியில் மீண்டும் சேர்க்காமல் அவுட் சோர்சிங் முறையில் ஊழியர்களை பணியில் அமர்த்திக் கொண்டனர். விடைத்தாள் திருத்தம், மதிப்பெண், சான்று தயாரிப்பது, கணினியில் பதிவேற்றம், பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் கல்லூரி நிர்வாகமே செய்தால் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்பதால் தான் தனியாருக்கு ஒப்பந்தம் விட்டனர். சென்னையில் உள்ள ஒரே குறிப்பட்ட நிறுவனத்திடம் ஒட்டுமொத்தமாக குத்தகைக்குவிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் ஆளுநர், இணை, துணை வேந்தர்கள், உயர் அதிகாரிகள் அனைவருக்கும் கொடுத்த புகார் மனுக்கள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன.

தில்லுமுல்லு!
இந்த பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஆனந்த்பாபு, ஜெயந்தி, எழிலரசி, விஜயகிருஷ்ணன், ராமச்சந்திரன், அன்பரசன் ஆகியோருக்கு போலியான பணி ஆணை தயார் செய்து‘ நிரந்தர’ பணியாளர்களாக மாற்றப்பட் டுள்ளனர். இதில், ஆனந்தபாபு திருப்பத்தூர் உறுப்புக் கல்லூரியில் உதவியாளராகவும், ஜெயந்தி மற்றும் எழிலரசி தென்னாங்கூர் கல்லூரியில் இளநிலை உதவியாளர்களாகவும் நிரந்தர பணியிடத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். விஜயகிருஷ்ணன் திருப்பத்தூர் கல்லூரியில் கண்காணிப்பாளராக பணி நியமனம் பெற்றுள்ளார். இவர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2013 ஆம் ஆண்டிலிருந்து அசோகன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக பணியாற்றி வரும் நிலையில், மேற்கண்ட ஆறு நபர்களில் 4 பேர் அசோகன் பணியில் சேர்ந்த நாளுக்கு முன்பாகவே பணி செய்ததாக போலியாக சான்று வழங்கியுள்ளார். இது முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும். நான்கு பேருக்கு வழங்கப்பட்ட போலி பணி ஆணையை ரத்து செய்வதோடு தமிழக அரசால் வழங்கப்படும் மானியத்திலிருந்து ஊதியம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வரும் இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடர வேண்டும் என்றும் காவல்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்தும் கண்டுகொள்ளப்படவில்லை.
மனுதாரரின் புகார் குறித்து ஏழு நாட்களுக்குள் பதில் அனுப்புங்கள் என கடிதம் அனுப்பப்படும் என்று ஆளுநர் அலுவலகம் 2013-ல் பதில் அளித்துள்ளது. 16 ஆண்டு காலமாக அந்த ஏழு நாட்கள் வரவே இல்லை.

பல்கலைக்கழகங்களின் ஊழல், முறைகேடுகளின் ஒட்டுமொத்த ஆணிவேர் ஆளுநர் அலுவலகம். அங்குள்ள அதிகாரிகளின் துணையோடுதான் முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள், கடைநிலை ஊழியர்கள் வரைக்கும் ஊழல் கரைபுரண்டோகிறது.
ஏபிவிபி மாணவர் சான்றிதழ் பெற்றது இப்படித்தான்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் ஊழல் முறைகேடு மாணவர்களின் கல்வித்தரமும், எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்கள் திலீபன், ஏகலைவன் மாணவர்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்காக கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும், ஊழல் பேர்வழிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பெரும் முறைகேடுகளின் ஒரு பகுதியாகத்தான், தில்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள ஏபிவிபி மாணவர் அங்கில் பசோயாவுக்கும் பி.ஏ சான்றிதல் காசு வாங்கிக் கொண்டு தரப்பட்டுள்ளது என்பதை இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் அம்பலப்படுத்துகின்றனர்.

தில்லி பல்கலைக்கழக மாணவரிடம் உள்ளது போலிச் சான்று தான் என்று திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நிர்வாகம் ஒப்புக் கொண்டுவிட்டது. ஆனாலும், தில்லி பல்கலைக் கழம் ஆய்வு செய்தபிறகுதான் எம்ஏ படிப்பதற்கு சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்று அந்த மாணவனுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு வக்காலத்து வாங்குகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.