===பேரா.எஸ்.சுப்பாராஜூ===
திருவாளர் நரேந்திர மோடி அவர்களின் அரசானது தனது பதவிக்காலத்தின் இறுதி ஆண்டில் உயர்கல்வித்துறையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திடும் கொள்கை மாற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது. சுதந்திர இந்தியாவில் இது நாள் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த கல்விக் கொள்கைகளை விடுத்து, ஒரு நேர் மாறான நிலைப்பாட்டினை மத்திய அரசு எடுத்துள்ளது. அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்று யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்திட அறிமுகப்படுத்தப்பட்ட ”இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம், 2018”ஆகும்.

இந்தியா விடுதலை பெற்ற போது, நாட்டிலிருந்த பல்கலைக்கழகங்கள் 30. உயர்கல்வி வழங்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை 850. அந்த நேரத்தில் உயர்கல்வி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2 இலட்சம். 1950க்குப் பிறகான 68 ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த அரசுகள் உயர்கல்வியில் நடைமுறைப்படுத்திய திட்டங்களின் விளைவாக இன்று 865 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 60ஆயிரத்துக்கும் அதிகமான கல்லூரிகள், உயர்கல்வி பெறும் மாணவர்கள் சுமார் மூன்று கோடி என விரிவடைந்துள்ளது. தற்சமயம், சீனா, அமெரிக்காவிற்கு அடுத்து அதிக உயர்கல்வி பெறுவோர் அதிகம் பேரை கொண்டதாக இந்திய உயர்கல்வி அமைப்பு உள்ளது. இந்த வியத்தகு வளர்ச்சி என்பது யுஜிசி என்ற அமைப்பின் மூலமே சாத்தியமானது என்பதை யாரும் மறுக்க இயலாது.

உயர்கல்வி விரிவாக்கத்திற்காக அமைக்கப்பட்ட ’இராதாகிருஷ்ணன் கல்விக் குழு’ கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் 1956 இல் பல்கலைக்கழக மானியக் குழு ஒரு நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டதுன. பன்முகக் கலாச்சாரத்தையும், ஏற்ற இறக்கமான பொருளாதார, சமூக, அரசியல் சூழலையும் கொண்ட இந்தியாவில் உயர்கல்வி வளர்ச்சி என்ற கடுமையான சவாலை ஏற்ற யுஜிசி, தனது 62 ஆண்டு ஆயுள் காலத்தில் சிறப்பான பணியினைச் செய்துள்ளது எனலாம். இன்று உயர்கல்வி பயில்வோர் விகிதம் 24 சதவீதம் (தேசிய சராசரி) என்ற அளவிற்கு கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், இது நாடு முழுக்க ஒரே மாதிரி இல்லை.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 30 சதவீத்துக்கும் மேல். வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் சில இந்தி பேசும் மாநிலங்களில் இந்த விகிதங்கள் 20 சதவீதத்துக்கும் குறைவு. யுஜிசி யின் கடந்த காலச் செயல்பாடுகள் குறித்தும் குறைகளில்லாமலில்லை. நிதி வழங்குவதில் பாரபட்சம், தாமதம், போதிய நிதி வழங்காமை, திட்டமிடுதல் மற்றும் ஒழுங்குபடுத்துதலில் பலவீனம் என்று பல்கலைக்கழக மானியக் குழு மீதான குறைபாடுகளும் உண்டு. யுஜிசி யினுடைய மேற்சொன்ன குறைபாடுகள் களையப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு யுஜிசி யை கலைக்க முடிவெடுத்துள்ளது. நோயைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக நோயாளியைக் கொல்வதைப் போல!

பல்கலைக்கழக மானியக் குழு ஒரு ஜனநாயக அமைப்பாகவே சமீப காலம் வரை செயல்பட்டு வந்தது. அதன் அமைப்பிலேயே ஜனநாயகத்தன்மை உள்ளது. யுஜிசி யின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களில் சரி பாதிக்கு மேல் கல்வியாளர்களாக இருக்க வேண்டுமென யுஜிசி சட்டம் சொல்கிறது. மத்திய நிதியில் செயல்பட்டாலும், மாநில அரசுகளின் கருத்தினையும் பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரித்தே வந்துள்ளது. சமீப காலம் வரை அதன் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு இருந்ததில்லை. ஆனால், 2014 இல் பதவியேற்ற மோடி அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) யுஜிசி யின் பல முடிவுகளில் தலையிட ஆரம்பித்தது.

காவி, கார்ப்பரேட் மயமாக்கல்
இந்த அரசு தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தினை நிறைவு செய்யவுள்ள நிலையிலும், தனது கல்விக் கொள்கையை அறிவிக்கவில்லை. ஆனால், அவர்கள் விரும்பும் ‘கல்வி வணிகமயமாக்கல் மற்றும் காவி மயமாக்கல்’ போன்ற விசயங்களை இக் கால கட்டத்தில் திட்டமிட்டு நடைமுறைப் படுத்தி வருகிறார்கள். மேலும் காட்ஸ் GATS ஒப்பந்தத்தின் படி இந்திய உயர்கல்வியை கார்ப்பரேட் மயமாக்கவும் இந்த அரசு விளைந்துள்ளது. வணிகமயத்திற்கு அச்சாரமாக கல்வியில் ’தரம்’ ’உலகத்தரம்’ பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். இந்திய உயர்கல்வி நிறுவனங்களைத் தரம் பிரித்தல், கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து தரச்சான்று வழங்குவதை தனியார் ஏஜென்சிகளுக்கு வழங்குவது, பொதுத்துறை மற்றும் தனியார் துறையில் ’சீர்மிகு கல்வி நிறுவனங்களை உருவாக்கி நிதியளிப்பது என அடுத்தடுத்த திட்டங்களை எம்எச் ஆடி நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதனுடைய உயர்கல்வி கார்ப்பரேட் மயக் கொள்கை அமலாக்கத்தின் ஒரு பகுதியே யுஜிசி யைக் கலைத்திட அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ”இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம் (HECI), 2018”ஆகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, கல்வி மத்திய மற்றும் மாநிலங்கள் இணைந்து (Concurrent List) செயலாற்ற வேண்டிய துறையாகும். 1976 வரை ’கல்வி’ மாநிலப் பட்டியலில் தானிருந்தது. எமெர்ஜென்சியின் போது தான் அது மத்திய, மாநில அரசுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. உண்மையில், கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ள சூழலில், உயர்கல்வி நிர்வாகத்தை மையப்படுத்தும் புதிய சட்டம் நாடு முழுக்க பலத்த எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புதிய சட்டப்படி உருவாக்கப்படும் ஆணையம், இந்தியா முழுவதுமுள்ள மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பதோடு, கலைப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் கொண்டதாக இருப்பது ஆபத்தானது.

கூடுதலாக, யுசிஜி அமைப்பின் உள்ளடக்கத்திலிருந்து மாறுபட்டு அமைக்கப்படவுள்ள யுதிய அமைப்பில் தலைவர் கல்வியாளராக இருக்க வேண்டியதில்லை. அவர் வெளி நாடு வாழ் இந்தியராகவும் இருக்கலாம். சரி பாதிக்கு மேற்பட்டவர்கள் மத்திய அரசு அதிகாரிகள், தரச்சான்று வழங்கும் அமைப்பின் தலைவர்கள் என அதிகாரிகளாக இருப்பர். மத்திய அரசு நியமிக்கும் தொழில் துறை பிரமுகர் ஒருவர் வேறு உண்டு. தலைவர் உள்ளிட்ட 14 உறுப்பினர்களில் இரண்டு துணை வேந்தர்கள் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் – ஆக 4 கல்வியாளர்களே உண்டு. உண்மையில் இது எம்எச் ஆர்டியின் யின் வாலாகவே செயல்படும்.

பன்முகத் தன்மைக்கு வேட்டு
இதுநாள் வரை கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி மானியம் வழங்கி வந்தது. இனி மேல் மானியம் வழங்கும் பணியை எச்இசிஎல் அல்லது இனி உருவாக்கப்படும் அமைப்பு செய்யுமென கூறப்பட்டது. இது நிதி வழங்குவதை அரசியல் மயமாக்கும் என எதிர்ப்பு கிளம்பியவுடன் எச் இஎப்ஏ போன்ற அமைப்பு உருவாக்கப்படுமென இப்போது கூறுகிறார்கள். இது மட்டுமல்லாது, இந்தியாவினுடைய பன்முகத்தன்மையைப் புறக்கணித்தது, உயர்கல்வி நிர்வாகத்தில் மையப்படுத்துதல், உயர்கல்வியை கார்ப்பரேட் மயமாக்குதல், மாநில உரிமைகள் பறிப்பு, கல்வி நிர்வாகத்தில் அரசு அதிகாரிகளின் ஆதிக்கம் போன்ற காரணங்களால் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. எச்இசிஐ வரைவு சட்டத்திற்கு எதிர்வினையாக 4000க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

எச்இஆர்டி சட்டத்தினை எதிர்த்து தமிழக அரசு உள்ளிட்ட பல மாநில அரசுகளும் தங்களது கருத்தினை பதிவு செய்துள்ளன. மாநில அரசுகளின் ஆட்சேபனையை மத்திய அரசும் எம்எச்ஆர்டியும் பொருட்படுத்தவில்லை. இவை மட்டுமல்லாது மத்திய அரசு உயர்கல்வியைச் சீரழிக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளை மிகவும் தீவிரமாக அமல்படுத்துகிறது. மக்களவையில் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தின் காரணமாக, எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படாமல், உயர்கல்வியைச் சீரழிக்கும் பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.

உயர் கல்வி வளாகங்களில் சுதந்திர சிந்தனை, எதனையும் கேள்விக்கு உட்படுத்துவது, விஞ்ஞானப் பூர்வ அணுகுமுறை என்பதெல்லாம் பழங்கதையாகி விட்டது. வேறு பட்ட கருத்தோட்டங்கள், விவாதங்கள் தடை செய்யப்படுகின்றன. முதல் தலைமுறை தலித் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் துன்புறுத்தப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்ட கொடுமைகள் ஹைதராபாத் ரோகித் வெமுலாவில் ஆரம்பித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வரை நீண்டது. இக்காலத்தில் அந்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை கருணையின்றி வெட்டப்பட்டது. இதனூடாக, பெரும்பான்மை மதவாதத்தினை கிளறி விடுவதன் மூலம் மத, இன சிறுபான்மையினர் மத்தியில் பீதியையும் வெறுப்பினையும் வளர்க்கின்றனர்.

சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிராக தேவையற்ற சர்ச்சையைக் கிளப்பி அதில் குளிர் காயும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கிறது. முஸ்லீம் அலிகார் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஜின்னாவின் புகைப்படத்தினை காட்டி, அங்கிருக்கும் இந்து மாணவர் அமைப்பு அப்பல்கலைக்கழகத்தின் தேச விசுவாசத்தினை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தனைக்கும் ஜின்னா அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது யாவருமறிந்ததே.

தமிழக நிலைமை
தமிழக உயர் கல்வி நிலைமையும் கவலைக்கிடமாகவே உள்ளது. ஊழலென்ற புற்று நோய் உயர்கல்வியை முழுவதுமாக பாதித்துள்ளது. ஊழலில்லாமல் எதுவுமில்லை. நியமனங்கள், மாணவர் சேர்க்கை, பாடப்பிரிவுகளுக்கு அனுமதி, பல்கலைக்கழக டெண்டர்கள் என அனைத்திலும் நீக்கமற ஊழல்! பல்கலைக்கழகத்தில் நிதியில்லை என்று கூறி மாணவர்களிடமும் பெற்றோரிடமும் பன்மடங்கு கட்டணக் கொள்ளை ! பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கல்வியாளர்களாக இல்லாது கம்பெனி முதன்மை அதிகாரிகள் போல செயல்பாடும் அவலம்.

’சுயநிதி’ ‘தொகுப்பூதியம்’ ’கான்ட்ராக்ட்’ என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான ஆசிரிய ஆசிரியைகள் கொத்தடிமைகளாய் உள்ளனர். “சம வேலைக்கு சம ஊதியம்”கோட்பாட்டினை அரசுகளும் நீதிமன்றங்களும் மதிப்பதில்லை. இன்றைய நிலையில் உயர்கல்வியில் சரி பாதிக்கு மேல் உள்ள அப்பகுதி ஆசிரியர்களுக்கு நியாயமான ஊதியம் உள்ளிட்ட பணி நிலைகள் கிடைத்திடாமல் உயர்கல்வியில் ’தரம்’ பற்றிப் பேசுவது கேலிக்கூத்தாகும்.
உயர்கல்வியை கார்ப்பரேட் மயமாக்கும் மத்திய அரசின் திட்டங்கள், அதனால் கொண்டு வரப்படும் சட்டங்கள், உயர்கல்விக்கான நிதி வெட்டு, உயர்கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மை மதவாதச் செயல்பாடுகள் என உயர்கல்விச் சூழல் மோசமடைந்துள்ளது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் கடைப் பிடிக்கப் பட்டு வந்த ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம், சர்வதேச சகோதரத்துவம் போன்ற விழுமியங்கள் இன்றைக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. உயர்கல்வி செயல்பாட்டாளர்கள் என்ற அடிப்படையில், மத்திய அரசின் மக்கள் விரோத உயர்கல்விக்கு எதிராக உரக்கக் குரல் கொடுப்போம்! அனைவருக்குமான உயர்கல்வி உரிமையைக் காத்திட அணி திரள்வோம்.

(22, 23 செப்டம்பர் 2018 – “ ஜனநாயக மதச்சார்பற்ற பொது நிதியிலான உயர்கல்வி” என்ற கருப்பொருளில் மூட்டா 24 ஆவது பொது மாநாடு நாகர்கோவிலில் நடைபெறுகிறது)

கட்டுரையாளர் : தலைவர், மூட்டா.

Leave a Reply

You must be logged in to post a comment.