சேலம்,செப் 20-
முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பல்துறை ஆய்வுகளே அடிதளமாக
உள்ளது என சேலத்தில் நடைபெற்றத புவித் தொன்மை கருத்தரங்கில் சேலம் பெரியார்
பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழக புவி அமைப்பியல் துறை இந்திய புவிஅமைப்பியல் கழகத்துடன் இணைந்து புவித்தொன்மை மற்றும் பூமியின் மீதான மனிதத் தாக்குதலின் விளைவுகள் தொடர்பான மூன்று நாள் தேசியக் கருத்தரங்கை நடத்தி வருகின்றது. அக்கருத்தரங்கின் தொடக்கவிழா செப்-19ல் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் தலைமையுரையாற்றிய துணைவேந்தர் குழந்தைவேலு தெரிவிக்கையில், ’புவி அமைப்பியல் என்பது பல துறைகளுடன் இணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி புலமாகும். உலகில் கண்டுபிடிக்கப்பட்ட பல முக்கியக் கண்டுபிடிப்புகள் பல துறைகளின் கூட்டு ஆய்வுகளால் கண்டறியப்பட்டவைகளாகும். மூலக்கூறுகளும், கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற வாயுக்களும் புவிப்பரப்பிலும், வளிமண்டலத்திலும் பல்வேறு மாற்றங்களை உருவாக்கும் ஆற்றல் சக்திகளாக விளங்குகின்றன.
குறிப்பாக அறிவியல் ஆய்வுகளில் ஹைட்ரஜனின் பயன்பாடுகள் குறிப்பிடத் தக்கனவாக உள்ளன. புவியின் செயற்பாடுகளைத் துல்லியமாக கணிக்க கணிதம் சார்ந்த தரவுகளைப் பயன்படுத்தி புவியின் செயற்பாடுகளைக் கணிக்கும் மாதிரிகளை உருவாக்க வேண்டும். இன்றைக்கு புவி தகவலியல் என்பது வளர்ந்து வரும் முக்கிய கல்விப்புலமாக உள்ளது. புவி அமைப்பில் உருவாகி உள்ள மாற்றங்கள் பல நூறு ஆண்டுகளாக நடந்து
வருகின்றன. இது குறித்த பல் துறைகளுடன் இணைந்த கூட்டு ஆய்வுகள் அவசியமாக
உள்ளது’ என்றார்.

இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய இந்திய புவிஅமைப்பியல் கழகத் தலைவர் ஹரிஸ் கே.குப்தா ’பூமியின் செயற்பாடுகள் குறித்த ஆராய்ச்சி மிக மிக முக்கியமான  ஆராய்ச்சியாகும். மக்கள் தொகைக்கு ஏற்ப பயன்பாட்டுக்கு பூமியில் கனிமங்கள் உள்ளனவா? என்பது பற்றி பூமியின் எதிர்காலம் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பூமியில் உள்ள கணித வளங்கள் ஆய்வுகளும், அது குறித்த தரவுகளும் முழுமையாக சேகரிக்கப்பட வேண்டும். புவி அமைப்பியல் என்பது வளர்ந்து வருகின்ற ஒரு முக்கியமான கல்வியாகும். உலகம் முழுவதும் செயற்கையாக உருவாக்கப்பட்ட 100 அடி உயரம் கொண்ட அணைக்கட்டுகளாக 15 ஆயிரம் அணைக்கட்டுக்கள் உள்ளன. இவற்றில் சில அணைக்கட்டுப் பகுதிகளில் நிலநடுக்கம் உருவாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே இது குறித்த ஆய்வுகள் அவசியமாக உள்ளன’ என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய இந்திய எண்ணெய் நிறுவன இயக்குநர் முனைவர்  பி.சந்திரசேகரன் ’மனிதர்களால் மட்டுமே பூமி அழிவுகளைச் சந்திக்கவில்லை, 240 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வறட்சி போன்ற இயற்கை நிகழ்வுகளாலும் பூமி அழிவுகளை சந்தித்துள்ளது. புவி அறிவியலில் ஆற்றல் பாதுகாப்பு என்பது அவசியமாக உள்ளது. புவி அறிவியல் என்பது அனைத்து பாடங்களுடன் இணைந்த பாடமாகும்’ என்றார்.
இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இத்தேசியக் கருத்தரங்கில் புவியின்
ஆற்றல் வளங்கள்,ஆற்றல் பாதுகாப்பு,தொன்ம வளங்கள், தொன்ம உயிர் பாதுகாப்பு,
புவி வெப்பமடைதல்,கடல் தட்பவெப்பம் போன்ற தலைப்புகளில் ஆராய்ச்சி உரைகள்
நிகழ்த்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ஆர். வெங்கடாசலபதி வரவேற்புரை யாற்றினார். முனைவர் வி. திருக்குமரன் நன்றி கூறினார். புவிஅமைப்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.வெங்கடேஷ்வரன், முனைவர் கு.அன்பரசு, முனைவர் ஆர்.சுரேஷ், முனைவர் ஏ.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.