பாட்னா:
போதைப்பொருளாக இருமல் மருந்தை பயன்படுத்திய 5 சிறுவர்கள் விடுதி வார்டனை கொலை செய்து விட்டு, தப்பியோடியுள்ளனர். பீகார் மாநிலம் புர்னியே நகரத்தில் உள்ள சிறார் குற்றவாளிகளுக்கான அரசு கூர்நோக்கு இல்லத்தில், குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூர்நோக்கு இல்லத்தின் வார்டனாக பிஜேந்திர குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூர்நோக்கு அறைகளில் வார்டன் பிஜேந்திர குமார் சோதனை நடத்தினார்.அப்போது, ஒரு அறையில் இருமலுக்கு பயன்படுத்தப்படும் இருமல் மருந்து பாட்டில்கள் அதிக அளவு இருந்ததை கண்டுபிடித்தார். அந்த அறையில் இருந்த சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுவர்கள் போதைப்பொருளாக இருமல் மருந்தை பயன்படுத்துவது தெரியவந்தது.

இதையடுத்து, சிறார்களுக்கான நீதி அமைப்பில் முறையிட்ட வார்டன் ஜிதேந்திர குமார், சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து சிறுவர்களையும் வேறு வேறு கூர்நோக்கு இல்லத்திற்கு மாற்ற அனுமதி பெற்றார். இதையறிந்து ஆத்திரமடைந்த 5 சிறுவர்கள், வார்டன் ஜிதேந்திரகுமாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். கூர்நோக்கு அறையில் இருந்த 17-வயது சிறுவன் ஒருவனையும் சுட்டுக்கொன்று விட்டு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.