புதுதில்லி;
பொதுத்துறை வங்கிகளில் பெரு முதலாளிகள் திருப்பிச் செலுத்தாத கடன் ரூ.6.2 லட்சம் கோடி உள்ளது. இதனை வசூலிக்க வங்கித் தலைவர்களைச் சந்திக்கும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உருப்படியான நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளின் நிதிச் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய வங்கிகளுக்கு அதிகரித்து வரும் வராக் கடன்கள் பெரும் பிரச்சனையாக உள்ளன. இந்நிலையில் வாராக் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பங்கேற்று, பொதுத் துறை வங்கித் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.

2015 மார்ச் முதல் 2018 மார்ச் வரையில் இந்திய வங்கிகளின் வாராக் கடன்கள் ரூ.6.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக வீரப்ப மொய்லி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதேபோல, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான கடனுதவியை வங்கிகள் சரிவர வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி கடன் வாங்கிவிட்டு நாட்டைவிட்டு ஓடிப் போனதால் நகை மற்றும் ரத்தினங்கள் துறையினருக்கும் கடன் வழங்க வங்கிகள் தயக்கம் காட்டி வருகின்றன.

Leave A Reply

%d bloggers like this: