===ஜி. ராமகிருஷ்ணன்===
மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் தொடக்கத்திலிருந்து நிறைவு காட்சி வரை நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களைத் தன்னோடு இணைத்துச் செல்கிறது. இப்படத்தின் வெற்றிக்கு இது முக்கியமான காரணம்.

தமிழ் திரைத்துறையில் படத்தயாரிப்பு பெரும்பான்மையாக கார்ப்பரேட் கைகளில் உள்ளது. இத்தகைய சூழலில் எளிய மனிதர்களின் கதைகள் திரைப்படமாவது பெரும் போராட்டமே. ஒரு படத்தை தயாரிப்பதற்கு இணையான செலவை, திரையிடலுக்கும் விளம்பரத்திற்கும் செய்யவேண்டும் என்ற சூழலை, சினிமா வணிகம் எதிர்கொள்கிறது. இத்தகைய பின்னணியில், மேற்குத் தொடர்ச்சி மலை வெற்றி பெற்றிருப்பது விளம்பரத்தினால் அல்ல. படத்தினுடைய திரைக்கதை, கதை வசனம், ஒலி, ஒளி, பின்னணியிசை, நடிப்பு என பலரின் கூட்டு உழைப்பே இதற்கு காரணம்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் இரண்டு பகுதிகளிலும் தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர்களும் இடுக்கி மாவட்டத்தைச் சார்ந்தவர்களும் வசித்து வருகிறார்கள். இம்மலையில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கைதான் கதையின் கரு. தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பால் உற்பத்தியாகும் ஏலக்காய் இப்போதும் தேசத்திற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகிறது. இதனால் தோட்ட முதலாளிகளின் வாழ்க்கை செழுமையாக இருந்தாலும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் பெருத்த முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை படத்தின் மூலம் புரிய வைக்கிறார்கள்.

கிராம மக்கள் வாழ்க்கையை அசலாக இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார். தோட்டத் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடிப்பாக அல்லாமல் தொழிலாளியாகவே காட்சிதரும் ரங்கசாமி (ஆண்டனி), இவரை காதலித்து துணைவியாகும் புதுமுக நடிகை காயத்திரி, கையில் ஒரு பையும் அதில் ஒரு குடையுமாக திருமணம் செய்து கொள்ளாத தொழிற்சங்கத் தலைவராக நடித்துள்ள சாக்கோ, திரைக்கதைக்கு அப்பாற்பட்டு இடைச்செருகலாக அல்லாமல் கதையோடு ஒட்டி வரக்கூடிய நகைச்சுவை பாத்திரமான கங்காணி, ஏலக்காய் மூட்டையை மலையிலிருந்து அடிவாரத்திற்கு தூக்கி வந்தால்தான் வாழ்க்கை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு ரத்த வாந்தி எடுக்கும் வனகாளி, மலைக் கிராமத்தில் கிரைண்டர் இல்லாக் காலத்தில் ஆட்டுரலில் மாவாட்டும் பாக்கியம் என பாத்திரங்களாக வருபவர்கள் நன்றாக நடித்துள்ளார்கள்.கதைக் கருவின் மையப்புள்ளியான கூலித்தொழிலாளி ரங்கசாமி சொந்த நிலம் வாங்குவதும் அதில் பயிர் செய்வதும் பிறகு அந்த நிலத்தையும் வாங்கிய கடனுக்காக பத்திரப்பதிவு செய்து கொடுத்து விட்டு, அதே நிலத்தில் வாட்ச்மேனாக வேலை செய்வதும் பல உழைப்பாளி மக்களின் வாழ்க்கை எதார்த்தத்தின் ஒரு துளியே ஆகும்.

தன்னுடைய ஏலக்காய் மூட்டை சரிந்து, சொந்த நிலம் வாங்கும் கனவு தகர்ந்து கடன் வாங்கி, கொஞ்சம் நிலம் வாங்கி, அவன் வாழ்க்கை துளிர் விடுகிறது. இத்தகைய சூழலில் நிலமற்ற தோட்டத் தொழிலாளர்களில் ஒரு தொழிலாளி கொஞ்சம் நிலம் வாங்கி சாகுபடி செய்கிற போது அந்த ஊரே திரும்பிப் பார்க்கும். ஊர் மக்களின் பார்வை தொழிலாளியாக இருந்து விவசாயி ஆன ரங்கசாமிக்கு சுகம் கலந்த மரியாதையை உருவாக்கும். ஆனால், அந்த வாழ்க்கை தகர்ந்து போவது படம் பார்ப்பவர்களை நெஞ்சுருகச் செய்கிறது.

விவசாய விளைநிலம் காற்றாலை கம்பெனியாக மாறுவதும், ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவன் முதலாளியாக ஆவதுமான நிகழ்கால வளர்ச்சிப் போக்கு இப்படத்தில் நன்றாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த மண்ணாயிற்றே. படத்தின் பின்னணி இசையும் இரண்டு பாடல்களுக்குமான இசையமைப்பும் அருமை. இப்படத்தில் பாத்திரங்கள் மட்டுமல்ல, தேனி ஈஸ்வரின் கேமராவும் பேசுகிறது.

அனைத்து அம்சங்களிலும் பாராட்டைப் பெறும் இப்படத்தில் சில விமர்சனங்களும் உள்ளன. கிராமப்புறச் சூழலில் சாதியின் இருப்பும் இயங்கியலும் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது முதன்மையானது. இரண்டாவது தொழிற்சங்க முன்னோடி ஒருவர் தொழிலாளர்களுக்கு துரோகம் செய்வதும் அதற்காக ஆத்திரமுற்று தொழிலாளியும் தொழிற்சங்கத் தலைவரும் அவரை கொலை செய்வதுமான காட்சிகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்காக போராடும் காட்சி படத்தில் வருகிறது. அத்தகைய காட்சிகள் மிக இயல்பாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கின்றன. அதற்கு பின்னர், தொழிற்சங்கத் தலைவரின் துரோகக் காட்சி இடம்பெறுவது தவறான பாதிப்பை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தாதா? என்ற அய்யம் எழுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சரி, இந்திய தொழிற்சங்க மையமும் சரி தவறே நடக்காது என்று சொன்னதில்லை. தவறு செய்பவர் யாராக இருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார். தவறுகள் விதிவிலக்காக நிகழ்பவை. விதிவிலக்கை விதியாக ரசிகர்கள் கருதுவது போல் காட்சி அமைத்திருப்பது பொருத்தமாக இல்லை.இந்த விமர்சனங்கள் இயக்குநரின் கவனத்துக்காகச் சொல்லப்பட்டுள்ளன. எளிய மக்களின் வாழ்க்கையை தன் கதையின் மையப் பொருளாக எடுத்திருக்கும் இயக்குநர் லெனின் பாரதி கொண்டாடி வரவேற்கப்பட வேண்டியவர். இத்தகைய கதையும், அதைச் சுமந்து படமாக்கி வெளிக்கொண்டுவந்த மிகப்பெரிய உழைப்பும் எத்தனை பாராட்டினாலும் தகும். படத்தை தயாரித்த விஜய் சேதுபதி மற்றும் இப்படத்தின் வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் பாராட்டுகள். அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

கட்டுரையாளர் : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: