சென்னை,
இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் . சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது பின்புணும் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசாணையை, முழுமையாக நடைமுறைப்படுத்த உத்தரவிடக்கோரி, ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த 3 ஆண்டுகளில் தலைக்கவசம் அணிவது தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசின் இந்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டால் மட்டும் போதாது என்றும், சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை, அரசே முழுமையாக நடைமுறைப்படுத்தாதது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வாகனங்களில் செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தது, அப்போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் மேட்டார் வாகன சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: