===எம். ராதாகிருஷ்ணன்===
தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஆலயங்களில் காணாமல்
போன சிலைகளை கண்டறிவதற்கான நட வடிக்கைகள் முறையாக நடைபெறவில்லை. சிலைகள் காணாமல் போன புகாரை மையமாகக் கொண்டு இந்துத்துவா சக்திகள் அரசின்
இந்து சமய அறநிலையத் துறையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தனது ஐயப்பாட்டை தெரிவித்திருந்தது. அது உண்மைதான் என உறுதிப்படுத்தும் சான்றில் ஒன்றாக இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா மீதான இக்குற்றச்சாட்டை காண முடிகிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாட்டை தொடர்ந்து கவனித்து வரும் சமூக செயல்பாட்டாளர்கள் கவிதா அவர்களைப் பற்றி “அத்துறையில் உள்ள முறைகேடு
களை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு பட்ட எதிர்ப்புகளை சந்தித்து போராடி வரும் பெண்மணி” என்று கூறுகிறார்கள். தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் திட்டத்தின் படி இவர் பொறுப்பில் உள்ள ஸ்ரீரங்கம் ஆலயத்தில் மொத்தம் 30 பேர் பயிலும் இப்பயிற்சிக் கூடத்தில் தாழ்த்தப்பட்ட தோழர்கள் 12, பிராமணர் 1, மற்றவர்கள் 17 என்ற விகிதத்தில் பயின்று வருகின்றனராம். இதற்கு காரணமானவர் இப்பெண்மணி என்கிறார்கள். இது ஒன்று போதாதா குறிவைத்து தாக்குவதற்கு.

ஏற்கெனவே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு இவரை ஒரு வழக்குக்காக கைது செய்தது.
அப்போதே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் நடவடிக்கை குறித்து கண்டனங்களை சமூக ஆர்வலர்கள் பலர் தெரிவித்தனர். இப்போது அவர் மேல் மற்றுமொரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு திருத்தணி முருகன் கோயிலில் உள்ள மூலவர் விமானத்துக்கு தங்க ரேக் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. இதில் தங்க முறைகேடும், ஊழலும் நடைபெற்றதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் கவிதா அவர்களையும் இணைத்து குற்றம்சாட்டியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.ஆனால் அந்த விமானம் செய்ததில் ஏற்பட விருந்த முறைகேட்டினை கண்டுபிடித்து அதனை நேர் செய்ததே கவிதா தான் என்கின்றனர் அறநிலையத் துறை பணியாளர்களில் சிலர். அதற்கான ஆதாரத்தையும் தரு
கிறார்கள். கவிதா அவர்கள் திருத்தணியில் இணை ஆணையராக பொறுப்பேற்றிருந்த போது இந்தத் தங்க விமானம் அமைப்பதில் பல அளவீடுகள் தவறாக உள்ளதை சுட்டிக்காட்டி கவிதா இந்து அறநிலையத் துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தினை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

எப்படித் தடுக்கப்பட்டது முறைகேடு?                                                                                                                             தங்க விமானம் செய்வதற்கான பணிமேற்கொள்ளப்படும்போது இணை ஆணைய
ராக (திருப்பணி) இருந்தவர் திருமதி ஹரிப்ரியாஎன்பவர். இவர் தான் விமானத்திற்கு எத்தனை கிலோ தங்கம் மற்றும் உலோகங்கள் தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டு ஆணையருக்கு அனுப்பி வைத்த ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திடுகிறார். தங்க விமானத்திற்கான பணி
தொடங்கும் சமயம் கவிதா இணை ஆணையராக திருத்தணிக்கு பணிமாற்றம் பெறுகிறார்.
தங்க விமானம் அமைப்பதில் அளவீடுகள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூடுதலாக தவறாக கணக்கிடப்பட்டதை கண்டறிகிறார் கவிதா. விமானம் மொத்தம் 1805.62 சதுர அடி என்பதாக ஹரிப்ரியா ஒப்புதல் கையெழுத்து இட்ட அனுமதி கடிதத்தில் தவறான கணக்கு இடம் பெற்றிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

மொத்தம் 96 கிலோ தங்கம் விமானத்திற்குத் தேவைப்படுவதாக ஆணையருக்கு ஹரிப்ரியா கோரியிருந்தார். ஆனால் தேவைக்கும் கூடுதலாக தங்கம் கோரப்பட்டிருந்ததை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியிருந்தார் கவிதா. அதாவது 32 கிலோ தங்கம் கூடுதலாக கோரப்பட்டிருந்தது.
விமானத்திற்கு ஆகும் தங்கம் என்பது மொத்தமே 62.6 கிலோவில் தங்க ரேக் செய்யும் பணியை முடித்திருக்கிறார். ரேக் செய்கையில் பாதரசத்தை தங்கத்தின் மேல் பூசும் போது தங்கம் அதில் படிந்துவிடும். பாதரசம், சாம்பல், கரி போன்றவற்றிலிருந்து ஏழு கிலோ தங்கம் வரை கவிதாவால் சேமிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் பதினாறு கோடி ரூபாய் வரை ஏற்படவிருந்த ஊழல் தடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர இந்த விமானப் பணிக்காக ஏற்பட்ட தங்கத்தின் சேதாரத்தை (பனிரெண்டு கிலோ தங்கம்) ஒப்பந்தக்காரரிடமிருந்து பெற வேண்டும் எனவும் கோரியிருக்கிறார் கவிதா.

இவை அனைத்தும் ஆவணங்களாக உள்ளன. தங்க விமானம் அமைக்கும் ஒப்பந்தம் மயிலாடியைச் சேர்ந்த மைலை கிராப்ட்ஸ் உரிமையாளர் எஸ்.கல்யாணசுந்தரம் என்பவ
ருக்கு ஒப்பந்ததாரராக பணி உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. ரெஹ்மான் என்கிற நபர் மூலம் விமானத்தில் தங்க ரேக் பூசும் பணியை ஒப்பந்ததாரரான கல்யாணசுந்தரம் மேற்கொள்கிறார்.
கல்யாணசுந்தரம், ரெஹ்மான் என அனைவருமே இந்த அளவீட்டில் தவறு செய்திருக்கிறார்கள் என்பதால் அதற்கான முறையான விசாரணை வேண்டும் என கவிதா கோரியிருக்கிறார். ஆணையரும் ஏற்றுக் கொள்கிறார்.

இப்படியிருக்க தவறான அளவீட்டோடு முறைகேட்டுக்கு வழிவகுக்கும் ஒப்பந்தத்திற்கு அனுமதி பெற்றது திருப்பணியின் அப்போதைய இணை ஆணையர் ஹரிப்ரியா. பின்னாளில் இவர் உப்பிலியப்பன் கோயிலில் புராதன நகைக் கடத்தல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். 2011, 2015ஆம் ஆண்டு வரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய குற்றம் தற்போது நிரூபிக்கப்பட்டு அரசின் மேல் நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளது.

ஹரிப்ரியா திருத்தணி இணை ஆணையராக பொறுப்பேற்பதற்கு முன்பு வரை கோயில்
திருப்பணி பணிகள் பூம்புகார் கார்ப்பரேஷனுக்கே தரப்பட்டு வந்திருக்கிறது. இவர் பொறுப்புக்கு வந்ததும் திருப்பணி பணிக்கானஒப்பந்தங்களை தனியாரிடம் ஒப்படைக்கிறார். அனைத்திலும் ரெஹ்மான் உப ஒப்பந்தக்காரராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டு உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் தங்கத் தேர் அமைக்கும் பணிக்கு டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. டெண்டர் ரெஹ்மானுக்குக் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் டெண்டரை ரத்து செய்து ரெஹ்மானுக்கே கிடைக்கும்படி ஹரிப்ரியா ஏற்பாடு செய்ததாக அறநிலையத் துறை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போது கவிதாவின் பெயரில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வழக்கான காஞ்சிபுரம்  ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 1600 வருட பழமையான உற்சவர் சிலையை 2009 ஆம் ஆண்டு முதன் முதலில் மாற்றிய போது இணைஆணையராக (திருப்பணி) பொறுப்பேற்றிருந்தவர் ஹரிப்ரியா. ஆனால் குறிவைக்கப்படுவது கவிதா. அப்படியானால் எந்தக் குற்றவாளியை தப்பிக்க வைக்க கவிதா சிக்கவைக்கப்படுகிறார். உண்மையை விளக்குமா தமிழக அரசு?

கட்டுரையாளர் : தமிழ்நாடு ஏஐடியுசி செயலாளர்.

நன்றி: ஜனசக்தி

Leave a Reply

You must be logged in to post a comment.