மேட்டுப்பாளையம்,
புலிகளின் கணக்கெடுப்பு பணிக்காக வனத்துறையினரால் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை திருடிய ஆறு பேர் கொண்ட வேட்டை கும்பலை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கையை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமாக கணக்கிட முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் கடந்த ஜூலை மாதம் துவக்கப்பட்டது. இதன்படி ஏற்கனவே புலிகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட 150க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அடர்ந்த காப்புக்காட்டு பகுதிகளுக்குள் புலிகளின் காலடித்தடம் மற்றும் அவற்றின் எச்சங்களின் அடிப்படையில் இவை புதர் மறைவுகள் மற்றும் மரங்களில் பொருத்தப்பட்டிருந்தன. இந்த நவீன கேமராக்களின் முன்புறமாக எந்த உயிரினம் கடந்து சென்றாலும் கேமரா தானாக இயங்க துவங்கி அவற்றை படம் பிடித்துக் கொள்ளும், இவை 24 மணிநேரமும் செயல்படும்.

இந்நிலையில் மனிதர்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்ட இப்பகுதிகளில் வனக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இக்கேமராக்கள் பெரும் தடையாக இருந்தது. குறிப்பாக, காடுகளுக்குள் மரங்களை வெட்டி கடத்துவோர்,மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை சட்ட விரோதமாக வேட்டையாடுவோர் போன்ற கும்பல்களின் நடமாட்டமும் இந்த கேமராக்களில் பதிவாகிவிடும் என்பதால் இவற்றை இக்கும்பல் திருடுவது அல்லது தங்களதுஉருவம் பதிவாகிவிட்ட கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி பவானியாற்றுக்குள் வீசுவது, வனத்திற்குள்ளேயே குழி தோண்டி புதைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த வகையில் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதியில் இருந்து ஏழு கேமராக்கள் திருடபட்டும், சேதப்படுத்தப்பட்டு வீசி ஏறியப்பட்டிருந்தன. புலிகளின் கணக்கெடுப்பிற்கென நவீன முறையில் உருவாக்கப்பட்ட இக்கேமராக்கள் ஒவ்வொன்றின் விலையும் ரூ.25 ஆயிரத்திற்கும் மேலாகும். இதனைத்தொடர்ந்து கேமரா திருடர்களை வனத்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் புதனன்று வேட்டை கும்பலை சேர்ந்த மகேந்திரன், மனோஜ், ரங்கநாதன், ராஜ்குமார், கருப்புசாமி, ராஜன் என ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து இரண்டு கேமராக்கள் மற்றும் மான் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் சுருக்கு கம்பிகள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்பின் கைது செய்யப்பட்ட அனைவரும் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: