மும்பை:
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு போன்ற காரணங்களால், இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 2 லட்சத்து 72 ஆயிரம் கோடியை இழந்துள்ளனர்.

குறிப்பாக, இந்திய பொதுத்துறை வங்கிகளின் பங்கு மதிப்பு மட்டும், ஒரே நாளில் ரூ. 20 ஆயிரம் கோடி அளவிற்கு சரிந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு 73 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அது இந்திய பொருளாதார நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இறக்குமதி வரியை உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பதாக மோடி அரசு கூறினாலும், நிலைமைச் சீராவதாக இல்லை. இதனால், இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த 2 நாட்களாக பெருத்த அடி வாங்கி வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமையன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 295 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 37 ஆயிரத்து 290 புள்ளிகளுக்கு இறங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 98.85 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 278 புள்ளிகளாகவும் சரிந்தது. டாலர் மதிப்பு உயர்வே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால், விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் தேனா வங்கி ஆகிய 3 பொதுத்துறை வங்கிகள் இணைப்பும், பங்குச் சந்தையில் விளைவுகளை ஏற்படுத்தி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் தேனா வங்கி ஆகிய இந்தியாவின் இந்த மூன்று முன்னணி பொதுத்துறை வங்கிகளும் இணையும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில், இவ்வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் திடீர் முடிவு முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவர்களை முதலீட்டை எடுத்துக்கொண்டு ஓட வைத்துள்ளது. இதனால், வங்கிகளின் பங்கு மதிப்பு ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் கோடி அளவிற்கு குறைந்துள்ளது.வங்கிகள் இணைப்பைப் பொறுத்தவரை, இதன் மூலம் வாராக்கடனில் சிக்கி தவிக்கும் இந்த மூன்று வங்கிகளும் நஷ்டத்தில் இருந்து தப்பிக்கும் என்பது மத்திய அரசின் வாதமாக உள்ளது. மூன்று வங்கிகளும் இணைந்த பிறகு வழக்கம் போல சுதந்திரமாக செயல்படும். பணியாளர்கள் விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது. இது வாராக்கடன் மற்றும் நஷ்டத்தை சமாளிக்க மட்டுமே என்று மத்திய அரசு கூறியது.

ஆனால், இந்த அறிவிப்பு முறையாக வெளியானதில் இருந்தே, வங்கிகளின் பங்கு மதிப்பு வேகமாக குறைந்து கொண்டே போனது. புதனன்று காலை வரையும் கூட, பொதுத்துறை வங்கிகளின் மதிப்பு குறைந்தது. சில வங்கிகள் மட்டும் ஏற்றத்தை சந்தித்தன.
எனி,னும், பங்குச் சந்தையில் பெரிய அளவிலான பங்குகளை வைத்துள்ள 22 வங்கிகளில், பெரும்பாலான வங்கிகள் இழப்பையே சந்தித்து இருக்கின்றன.வங்கிகள் இணைப்பு அறிவிப்பு வெளியான செவ்வாய்க்கிழமையன்று ஒரே நாளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளின் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இழப்பு தொடரலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.