நாமக்கல்,
இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்களை தரக்குறைவாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்யக்கோரி அறநிலையத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூரில் நடந்த கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்களையும் மற்றும் அவர்களது வீட்டு பெண்களையும் ஆபாசமாகதரக்குறைவாக மிக மோசமாக பேசியுள்ளார். அவ்வாறு பேசிய எச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பணிபுரியும் அலுவலர்கள் செவ்வாயன்று கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டதலைவர் பெரியசாமி தலைமைதாங்கினார். மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் சிவக்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதேபோல், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலகத்தை பூட்டி விட்டு தமிழ்நாடு அரசு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோவில்அலுவலக உதவி ஆணையாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவில் பணியாளர்கள் திரளாக பங்கேற்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: