சேலம்,
பழுதடைந்த தனியார் பள்ளி பேருந்துகளால் தொடர்ச்சியாக நடைபெறும் விபத்துக்களை தடுக்க வலியுறுத்தி வாலிபர் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், கருமந்துரை மலைப்பகுதியாகும். இங்குள்ள தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மிகவும் பழுதடைந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன. குறிப்பாக கடந்த வாரம் இப்பகுதியில் உள்ள பிரபாவதி என்ற தனியார் பள்ளியின் வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் குமார் விபத்தில் மரணமடைந்தார். இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் எந்த இழப்பீடும் குடும்பத்தாருக்கு வழங்கவில்லை. ஆகவே, தனியார் கல்லூரி வாகனத்தை சரிவர நிர்வாகிக்காத பள்ளி நிர்வாகம் குமாரின் குழந்தைகளுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்க நிதியுதவி அளித்திட வேண்டும். குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். பள்ளி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். பழுதடைந்த தனியார் பள்ளி வாகனத்தை இயக்க அனுமதித்த ஆர்டிஓ மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், புண்டிகாடு, கும்பப்பாடி, தேக்கம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு போதிய அரசு பேருந்தை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கருமந்துரை பேருந்து நிலையம் முன்பு திங்களன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் செயலாளர் எ.பொன்னுசாமி தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் என்.கிருஷ்ணமூர்த்தி, வி.சின்னமணி, வாலிபர் சங்க இடைக்கமிட்டி செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: