கோவை,
சிறுத்தை இறப்பு விவகாரத்தில் பழங்குடியின மக்களை வனத்துறையினர் சித்தரவதை செய்ததை கண்டித்து மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பொள்ளாச்சியில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், வனத்துறையினர் இந்த அத்துமீறல் தொடர்பாக சார் ஆட்சியர் தலைமையிலான குழு விசாரித்திட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த செப்.6 ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்டு, நகங்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை என்கிற பெயரில் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட பழங்குடியின குடியிருப்பு பகுதியில் அத்துமீறி நுழைந்து பழங்குடியினத்தவரை அடித்து சித்தரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தப்பவைப்பதற்காக அப்பாவி பழங்குடியின மக்களை சிக்கவைக்க சூழ்ச்சி நடைபெறுவதாக பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் வனத்துறையினரை கண்டித்து ஆவேசமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார், பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, திருப்பூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.மதுசூதனன், மலைவாழ் மக்கள் சங்க கோவை மாவட்ட செயலாளர் வி.சந்திரசேகர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.துரைசாமி மற்றும் முகமது மைதீன், அம்மாசை உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

விசாரணை அதிகாரி நியமனம் இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோர் பொள்ளாச்சி சார் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, இச்சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சார் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் விளக்கினார். இதில், சார் ஆட்சியரை விசாரணை அதிகாரியாக நியமித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பதாகவும், செப்.26 ஆம் தேதிகாலை 11 மணிக்கு பாதிக்கப்பட்ட அனைவரிடமும், நேரிடையாக விசாரித்து பதிவு செய்ய உள்ளதாகவும், அன்றையதினம் வரமுடியாதவர்களை அடுத்த தேதியை தீர்மானித்து விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வனத்துறையினரால் பாதிக்கப்பட்ட கனகராஜ் மற்றும்முருகன் ஆகிய இருவருக்கும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும், ரத்த பரிசோதனை செய்திடவும் உத்தரவிட்டார். மேலும், விசாரணை நடைபெறும்வரை பழங்குடி மக்களை எவ்விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது என வனத்துறையினருக்கு அறிவுறுத்தல் செய்துள்ளதாகவும் சார் ஆட்சியர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.