திருப்பூர், செப். 19 –
திருப்பூர் மாநகராட்சி 12ஆவது வார்டு ராஜம்மாள் லே அவுட் பகுதியில் ஓராண்டு காலமாக நீடித்து வரும் கழிவுநீர் குழாய் அடைப்பை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாததால் பொது மக்கள் கடும் இன்னல்பட்டு வருகின்றனர்.
ராஜம்மாள் லே அவுட் குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதி வீடுகளில் உற்பத்தியாகும் கழிவுநீர் வெளியேறுவதற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 500 அடி நீளம், 10 அடி ஆழத்தில் புதை சாக்கடை அமைக்கப்பட்டு முருங்கப்பாளையம் பிரதான சாக்கடை வடிகாலுடன் இணைக்கப்பட்டுள்ளது. கால்பபோக்கில் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கழிவுநீர் வரத்து காரணமாக இந்த கழிவுநீர் குழாயில் கழிவுகள், மண் உள்ளிட்டவை தேங்கி அடைத்து இறுகிப் போயுள்ளதாகவும், அதனால் ராஜம்மாள் லே அவுட் கழிவுநீர் வெளியேறிச் செல்ல வழியில்லாமல் வீதிகளில் தேங்குவதுடன், வீடுகளுக்குள்ளும் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை கடந்த ஓராண்டு காலமாக உள்ளது என்று பொது மக்கள் கூறுகின்றனர். இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர், முதல் மண்டல உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக் கொடுத்தும், பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை என்று முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ்.ரவிச்சந்திரன் கூறுகிறார். புதன்கிழமை மாநகராட்சி ஆணையரிடம் பேசியும் கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துகின்றனர் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் ராஜம்மாள் லே அவுட் பொது மக்கள் பங்களிப்பு தொகை செலுத்தி கழிவுநீரகற்றும் வாகனத்தை வரவழைத்து புதனன்று அடைப்பை அகற்றிட நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் கழிவுத் தொட்டியில் எவ்வித பாதுகாப்பு கவசமும் இல்லாமல் உள்ளே இறங்கி ஆபத்தான சூழலில் பணியாற்றினர். எனினும் கழிவுநீர் குழாய் அடைப்பை முழுமையாக சரி செய்ய முடியாத நிலை இருப்பதாக தெரிவித்தனர்.
மழைக் காலம் தொடங்கும் நிலையில் இந்த அடைப்பு சரி செய்யப்படாவிட்டால் குடியிருப்புப் பகுதியில் மழைநீர், கழிவுநீருடன் வீடுகளுக்குள் புகுந்து மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மாநகராட்சி நிர்வாகம் அவசர அவசிய உணர்வுடன் இந்த பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜம்மாள் லே அவுட் பகுதி பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: