திருப்பூர்,
திருப்பூரில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு வைத்திருந்த பதாகையை அப்புறப்படுத்தச் சொல்லி குடிபோதையில் இருந்த இந்து முன்னணி குண்டர்கள் அட்டூழியம் செய்தனர்.

திருப்பூர் போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளுவர் பேரவை அமைப்பின் சார்பில் பிளக்ஸ் தட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் மதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடிப்போம் என்ற வாசகம் வைக்கப்பட்டிருந்தது. இந்த பதாகையை இந்து முன்னணியினர் அராஜகமாக அகற்றி, அந்த தட்டியை வைத்த திருவள்ளுவர் பேரவையைச் சேர்ந்த தொண்டர்களையும், அப்பகுதி மக்களையும் அச்சுறுத்தும் காரியத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். எனினும் தகராறு செய்த காவி குண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக பெரியார் பிறந்த நாள் தட்டியை அப்புறப்படுத்திட நடவடிக்கை மேற்கொண்டது திருவள்ளுவர் பேரவை தொண்டர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சமூக விரோதிகள் அட்டூழியம்
முன்னதாக அன்று மாலை சுமார் 5 மணியளவில் சக்தி நகர் பகுதியில் ஒரு கும்பல் குடிபோதையில் தெருவோரம் இருந்த மரங்களின் கிளைகளை முறித்து தெருவில் வீசியும்,  தெருவில் நடமாடிக் கொண்டிருந்தவர்களை தகாத வார்த்தைகளில் பேசியும் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்து காவல் துறையினர் அங்கு வருவதற்குள் அந்த கும்பல் தப்பிச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக, இரவு 8 மணியளவில் போயம்பாளையம் அருகே ராஜா நகர் பகுதியில் இருபதுக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அவர்களுக்குள்ளாக மாறி மாறி அடித்துக் கொண்டு வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தினர். இது அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் மத்தியில் கடும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது.  எனினும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை அப்பகுதியைச் சேர்ந்தோர் துணிச்சலுடன் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். போயம்பாளையம் வட்டாரத்தில் தொடர்ச்சியாக இதுபோன்ற வன்முறை கும்பல்கள் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே காவல் துறை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.