மிகப் பழைய, பொருத்தமற்ற, தேவையற்ற தகவல் தொடர்புகளை சமூக ஊடக வலைப்பின்னல்களில் இருந்து மறப்பதற்கும், அகற்றுவதற்குமான புதிய உரிமைகளை அறிமுகப்படுத்துவதாக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழுவால் தயாரிக்கப்பட்ட தனியொருவரின் தரவுகளைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைவு – 2018 இருக்கின்றது. இத்தகைய கருத்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இது மிகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள போதிலும், பத்திரிகை சுதந்திரத்தைப் பெரிதும் விரும்புகின்ற அமெரிக்காவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.

கடன்களை அடைப்பதற்காக தன்னுடைய சொத்துக்களை விற்றது குறித்து 1998ஆம் ஆண்டு கூகுள் மற்றும் லா வாங்கார்டியா செய்தித்தாளில் வெளியான செய்தியை அகற்ற வேண்டுமென்று மரியோ கோஸ்டேஜா கோன்சலஸ் என்பவர் விரும்பினார். இது குறித்து அவருக்கு இருக்கின்ற உரிமைகளை நிலைநாட்டி, அவருடைய வாழ்நாளின் விரும்பத்தகாத பகுதியை நினைவுபடுத்தாமல் இருக்கும் வகையில் அந்தச் செய்தி அகற்றப்பட வேண்டும் என்று ஐரோப்பிய நீதிமன்றம் 2009இல் தீர்ப்பினை வழங்கியது. ஆனால், தி நியூ யார்க் பத்திரிகை தனது கடந்த காலத்தைப் பற்றி செய்திகள் வெளியிடப்படுவதை விரும்பாத வில்லியம் ஜேம்ஸ் சிடிஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றமோ, உண்மைகளை வெளியிடுவதற்கென்று தனிப்பட்ட வகையில் சமூக மதிப்பு இருப்பதாகத் தெரிவித்து அவருடைய கருத்துடன் ஒத்துப்போகவில்லை.

தான் திருமணம் செய்து கொள்ளாத ஒரு பெண்ணின் பெயரை இணைத்து தன்னுடைய திருமணத்திற்கான சான்றிதழை இந்தியாவில் ஒருவர் பெற்றிருந்தார். அந்தச் சான்றிதழ் செல்லுபடியாகாது என்று அறிவிக்கக் கோரிய அந்தப் பெண்ணின் தந்தையின் வேண்டுகோளை கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. தனது கடந்த காலத்தை மறந்து விடுவதற்கான உரிமை பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இருக்கின்ற அதே வேளையில், தனது மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை ஊடகங்கள் குறிப்பிடக் கூடாது என்று வலியுறுத்துவதற்கான அதிகாரம் அற்றவராகவே அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கிறார் என்று குஜராத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஸ்ரீகிருஷ்ணா குழுவால் தயாரிக்கப்பட்டிருக்கும் வரைவு மசோதாவில் நீதிபதியாக இல்லாத ஆனால் அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் தரவுகளை வெளியிடுவது, அகற்றுவது குறித்து  தீர்மானித்து அது பற்றிய தீர்ப்பினை முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரைவு மசோதாவின் பிரிவு 27இல், தரவுகள் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்காக அவை பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில் அல்லது அவை மேலும் தேவைப்படாத நிலையில் அல்லது ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அனுமதி திரும்பப் பெறப்பட்ட நிலையில், அல்லது நடப்பில் இருக்கும் சட்டங்களுக்கு முரணாக இருக்கும் நிலையில் அத்தகைய தரவுகளைப் பயன்படுத்துபவர்கள், கையாளுபவர்கள் (தொலைக்காட்சி, இணைய தளம் அல்லது செய்தித்தாள்), அவற்றைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான உரிமை அந்தத் தரவோடு நேரடியாகத் தொடர்பில் உள்ளவருக்கு (உதாரணமாக, முன்னராக குற்றஞ்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் குடிமக்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் தகவல் அறிந்து கொள்வதற்கான உரிமை மீறப்படுவதாக நினைத்தால், தகவல்கள் வெளியிடப்படுவது குறித்து தீர்ப்பளிக்கும் அதிகாரியே முடிவு செய்து கொள்ளலாம் என்று பிரிவு 27(2) கூறுகிறது. இதனைத் தீர்மானிக்கும் போது, அந்த சட்டப் பிரிவின் மூன்றாவது துணைப் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள (அ) தனிப்பட்டவர்கள் தொடர்பான தரவுகளின் முக்கியத்துவம் (ஆ) தகவல்களை வெளிப்படுத்துகின்ற மற்றும் அணுகுவதற்கான அளவு ஆகியவை தடைசெய்யப்பட்டிருக்கின்றனவா அல்லது முறைப்படுத்தப்பட்டிருக்கின்றனவா என்பதை அறிந்து கொள்வது (இ) பொதுவாழ்வில் தரவோடு நேரடியாகத் தொடர்பில் இருப்பவருக்கு இருக்கின்ற பங்கு (ஈ) தனியொருவரின் தரவுகள் குறித்து அறிந்து கொள்வதில் பொதுமக்களுக்கு இருக்கும் தேவை மற்றும் (e) தரவுகளைக் கையாளுபவர்கள் தனிப்பட்டவர்களின் தரவுகளை அணுகுவதை அல்லது சம்பந்தப்பட்ட தகவல்களின் வெளிப்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் அல்லது தடுக்கப்பட வேண்டும் என்றால் அதனை குறிப்பிடத்தக்க வகையில் தடை செய்வது போன்ற வழிகளில் தகவல்களை அவர்கள் வெளிப்படுத்துகின்ற விதம் மற்றும் தரவுகளைக் கையாளுபவர்களின் நடவடிக்கைகள் உள்ளிட்ட ஐந்து காரணிகளை அவர் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பளிக்கின்ற அதிகாரியின் உத்தரவுகளால் பாதிக்கப்படுகின்ற எவரொருவரும் மறுஆய்விற்காக மனு செய்து கொள்ளலாம். அந்த மனுவின் மறுபரிசீலனையில் அதிகாரியின் முடிவு திரும்பவும் ஏற்றுக் கொள்ளப்படும்பட்சத்தில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். தரவு பாதுகாப்புகளைப் பொறுத்த வரையில், இது நன்றாகவே இருக்கிறது. எனினும், பொது வாழ்வில் ஈடுபடுபவர்களின் கடந்தகால அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அடிப்படையில் தரவுகளைப் பயன்படுத்துபவர்களாக இருக்கின்ற செய்தித்தாள்கள் அல்லது இணைய பத்திரிகைகளின் விமர்சிக்கக் கூடிய சுதந்திரத்திற்கு தரவோடு நேரடித் தொடர்பில் இருப்பவர் ஒரு அரசு ஊழியராக (உதாரணமாக ஒரு முன்னாள் மந்திரி) இருப்பது ஆபத்தை விளைவிப்பதாகவே இருக்கும். மேலும் பத்திரிகையாளர் ஒருவர் அந்த தகவல்கள் குறித்து எழுதுவதற்கான அனுமதியைப் பெறுவதற்காக அந்த அதிகாரியின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும். தகவலைப் பெற விரும்புகின்ற ஒருவருக்கு தான் மத்திய தகவல் ஆணையத்தை அணுக வேண்டுமா அல்லது தரவு பாதுகாப்பு ஆணையத்தை (DPA) அணுக வேண்டுமா என்ற குழப்பம் நிச்சயம் ஏற்படும். தீர்ப்பு வழங்குகின்ற அதிகாரிகள் தரவு பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்களுக்கு கீழ்படிந்து நடப்பவர்களாகவே இருப்பார்கள்.

தரவு பாதுகாப்பு உரிமைகளுக்காகத் தரப்பட்டிருக்கும் விதிவிலக்குகளும், வெளியான தகவல்கள் மறக்கப்படுவதற்கான உரிமை போன்றவைகளும் பத்திரிகை சுதந்திரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்ற வகையிலேயே இருக்கின்றன. அரசின் பாதுகாப்பு நலனுக்கென தரவுகளைப் பயன்படுத்துவதன் நோக்கம் இருக்கும்பட்சத்தில், மறக்கப்பட வேண்டிய உரிமை உள்ளிட்ட தரவுகளோடு நேரடித் தொடர்பில் இருப்பவர்களுக்கான உரிமைகளுக்கு இந்த சட்டத்தின் ஆறாவது அத்தியாயத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. அரசிற்கு இருக்கின்ற அத்தகைய நலன்கள் பற்றி தீர்மானிக்கவும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான மற்றுமொரு அதிகார மையத்தை நிறுவுவதற்காகவும் பாராளுமன்றம் மூலமாக சட்டம் ஒன்றை அரசாங்கம் இயற்ற வேண்டும். எந்தவொரு குற்றத்தினையும் தடுப்பது, கண்டறிவது, விசாரணை செய்வது மற்றும் தண்டனை தருவது அல்லது எந்தவொரு வகையிலும் சட்டத்தை மீறுவது போன்றவற்றின் அடிப்படையில் இருக்கின்ற தரவுப் பயன்பாடுகளுக்கு இந்த உரிமைகள் பொருந்தாது. இவ்வாறான நலன்களையும் கருத்தில் கொள்வதற்கென்று பாராளுமன்றம் மற்றுமொரு சட்டத்தையும் இயற்ற வேண்டும். சட்ட மசோதாவின் 42 மற்றும் 43 பிரிவுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இந்த இரண்டு கூடுதல் சட்டங்களுக்கான எந்தவொரு வரைவையும் ஸ்ரீகிருஷ்ணா குழு பரிந்துரைக்கவில்லை. இதற்கென்று பிரிவு 4 (தனியுரிமைக்கான உரிமை மதிக்கப்பட வேண்டும்), பிரிவு 31 (நேர்மையான மற்றும் நியாயமான செயலாக்கக் கடமைகள்) ஆகியவை பயன்படுத்தப்படும்.

தனியொருவரின் தரவுகளைப் பயன்படுத்துவது என்பது மிகவும் அவசியமாக அல்லது சட்டபூர்வமான நோக்கத்திற்காக அவசியத் தேவையாக அமைந்திருந்தால், சட்டத்தின் உட்பிரிவுகள் 4 மற்றும் 31 தவிர்த்து, இரண்டு முதல் எட்டாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எதுவும் பொருந்தாது என்று பிரிவு 27இல் இதழியல் நோக்கத்திற்கென்று விலக்கு அளிக்கப்படுகிறது. இந்திய பத்திரிகை கவுன்சில் மற்றும் சுயநிர்வாக அமைப்பு கொண்ட ஊடக அமைப்பு ஆகியவற்றால் வெளியிடப்படுகின்ற நன்னடத்தை விதிகளுக்கு உட்பட்டு இருப்பதாக பத்திரிகையாளர் நிரூபித்தால் மட்டுமே பிரிவு 27(1) செல்லுபடியாகும் என்று விலக்கு குறித்த சட்டப்பிரிவு கூறுகிறது. ஆக இந்த விஷயத்தைக் கையாளுகின்ற அலுவலர் அல்லது தீர்ப்பை வழங்கப் போகின்ற அதிகாரி ஆகியோரின் கருத்துக்களைச் சார்ந்தே பத்திரிகை வெளியீடு என்பது இனிமேல் இருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தால் பரிந்துரைக்கப்படாத, நீதித்துறையால் நிராகரிக்கப்பட்டிருக்கின்ற செயல்பாடுகளை குடிமக்கள் மற்றும் ஊடகங்கள் மீது சுமத்தி பத்திரிகைகளில் வெளியாவதற்கு முன்னராகவே தகவல்களை வெளியிடுவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவே இத்தகைய நடவடிக்கை இருக்கப் போகிறது.

இந்த வரைவு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகள் மிகக் கடுமையானவையாக, அதிகப் பட்சமாக இருக்கின்றன. விசாரணைக்குப் பின்னர் தண்டனை விதிக்கும் அதிகாரத்தை தீர்ப்பு வழங்கும் அதிகாரிக்கு சட்டப்பிரிவு 74 வ்ழங்குகிறது, இழப்பீடு தருவதை சட்டப்பிரிவு 75 உறுதிப்படுத்துகிறது. சட்டப்பிரிவு 31 பாதுகாப்பு காரணங்களை மீறும் போது ஐந்து கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என்று கூறுகிறது. இந்தச் சட்டத்தின் எந்தவொரு விதிமுறையையும் கடைப்பிடிக்கத் தவறுகின்ற எந்தவொரு நபருக்கும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று பிரிவு 69 தெரிவிக்கின்றது. இத்தகைய சட்டப் பிரிவுகள் நிச்சயம் பத்திரிகையாளர்களுக்கு எதிராக எளிதாகப் பயன்படுத்தக்கூடும்.

இந்த சட்டவரைவு அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டதா? அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19(2) கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான தளமாக “தனியுரிமை” என்பதைக் கருதவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்படும் ஒரு பெரிய திருத்தம் மூலமாக சட்டப்பிரிவு 19(2)இல் “தனியுரிமை” என்பது சேர்க்கப்பட்டாலன்றி, அரசியலமைப்புச் சட்டம் குறித்த நீதித்துறையின் பார்வையில் இந்த வரைவு மசோதா தோல்வியையே காணும். இந்த தரவு பாதுகாப்பு மசோதா பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஆகியவற்றிற்கு ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கும் என்பது உறுதி.

நன்றி https://indianexpress.com/article/opinion/columns/personal-data-protection-bill-2018-justice-bn-srikrishna-committee-5355284/

– தமிழில்: முனைவர் தா. சந்திரகுரு, விருதுநகர்

Leave a Reply

You must be logged in to post a comment.