திருப்பூர்,
திருப்பூரில் சுகாதாரமற்ற முறையில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 25 கிலோ ஆட்டு இறைச்சி மற்றும் 50 கிலோ மீன் ஆகியவற்றை சுகாதாரத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

திருப்பூரில் 500க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளில் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி உள்ளிட்ட இறைச்சி வகைகள் விற்கப்படுகின்றன. பெரும்பாலான கடைகளில் சுகாதாரமற்ற சூழல் இருப்பதுடன், சில கடைகள் சாக்கடை கால்வாய் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இறைச்சிக் கழிவை கடைக்கு மிக அருகில் குடியிருப்பு பகுதியில் கொட்டி அசுத்தப்படுத்துவதுடன், ஈக்கள் மொய்க்கும் நிலையில் சாக்கடை கால்வாயில் இறைச்சி கழிவை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர்.இந்நிலையில் விதிமுறைகளை பின்பற்றாமல் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுவது பற்றி புகார் வந்த நிலையில், திருப்பூர் மாநகர் நல அலுவலர் டாக்டர் பூபதி தலைமையில் சுகாதார அலுவலர் பிச்சை,  ஆய்வாளர் கோகுல் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதனன்று காலை தாராபுரம் சாலை, காங்கயம் சாலை ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட கடைகளில் இருந்து 25 கிலோ ஆட்டு இறைச்சி, 50 கிலோ மீன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அத்துடன் அப்பகுதியில் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த சாலையோர கடைகளும் அகற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.