கோவை,
ஆனைமலையில் சிறுத்தையை வேட்டையாடிய நபர்களை தப்பிக்க வைக்க பழங்குடியின மக்களை தாக்கியதுடன், வீண்பழி சுமத்தும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட ஆனைமலை வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தையின் சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை என்ற பெயரில் பந்தகாலன்பதி, ஜெ.ஜெ.நகர், நரிக்கலபதி ஆகிய பழங்குடியின மக்களின் குடியிருப்பு வீடுகளில் புகுந்து வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் பழங்குடியின மக்களின் வீட்டில் உள்ள பொருட்களை நாசம் செய்ததுடன், அவர்களை அழைத்துச் சென்று அடித்து தாக்கியும், ஊசி போட்டு துன்புறுத்தியும் கொடுமைப்படுத்தியும் உள்ளனர்.

அதாவது, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தப்பிக்க வைத்திட பழங்குடி மக்களை வீண்பழியில் சிக்க வைப்பதற்கான செயலில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினரின் இக்கொடுஞ் செயலை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இச்சம்பவத்தில் வனத்துறையால் தாக்கப்பட்டு வேட்டைகாரன்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை வனத்துறையினர் வெளியேற்ற நிர்பந்தம் செய்தும், மருத்துவமனையை விட்டு வெளியேற்றியும், வனத்துறையால் ஊசி போடப்பட்ட பழங்குடி மக்களை ரத்த பரிசோதனைக்கு அனுப்பாமல் முழு சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றியது கொடூர நிகழ்வாகும். வனத்துறையினரால் தாக்கப்பட்ட 7 பேர் ஆழியார் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது, ஒருவரிடம் மட்டும் விசாரித்து சி.எஸ்.ஆர். போட்டுள்ளனர். அதிலும் பாரபட்சமாக பழங்குடியின மக்களை தாக்கிய வனத்துறையினரை தப்பிக்க வைக்க கூடிய வகையில் விசாரணை அறிக்கை தயாரித்துள்ளது கண்டிக்கதக்கது. ஆகவே பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை தாக்குதல் நடத்தியும், இழிவாக வார்த்தைகளில் பேசி துன்புறுத்திய வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். சிறுத்தையை வேட்டையாடிய உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க பழங்குடி மக்கள் மீது வீண்பழி சுமத்துவதை உடனே நிறுத்திட வேண்டும்.

ஆனைமலை வனப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள ரிசார்ட், சொகுசு பங்களா, தங்கும் விடுதிகளுக்கு வந்து சென்றவர்களை கண்டறிந்து விசாரித்திடவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் சார்பில் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.