கோவை,
மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி கோவை அரசு கலைக் கல்லூரியின் மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் விடுதி ரேஸ்கோர்ஸ் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் போதிய அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து செவ்வாயன்று கல்லூரி நுழைவு வாயில் முன்பு மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி விடுதியில் வழங்கும் உணவு தரமற்றதாக இருப்பதாகவும், உணவு வழங்கும் நேரம் மற்றும் பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும். கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். விடுதி அறையில் சேதமடைந்த இடம் மற்றும் பொருட்களை சரி செய்து கொடுக்க வேண்டும். மாதம் ஒருமுறை விடுதி காப்பாளர் வந்து பார்வையிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதனையடுத்து மாணவர்களிடம் கல்லூரி பேராசிரியர்கள் பேச்சுவார்த்த நடத்தினர். ஆனால், மாணவர்கள் கல்லூரி முதல்வர் நேரடியாக வந்து பேச்சுவார்ததை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர், அவர்களை சமாதானப்படுத்திய பேராசிரியர்கள் மாணவர்களை கல்லூரி முதல்வர் சித்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து சென்றனர். அங்கு மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்த கல்லூரி முதல்வர் அதனை உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: