ஈரோடு:
குண்டேரிப்பள்ளம் அணை நீரை விற்பனைக்காக திருடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், குண்டேரிப்பள்ளம் அணையை ஒட்டிய வினோபா நகரை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது, குண்டேரிப்பள்ளம் அணையையொட்டிய வினோபா நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அப்பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்த்தும் வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம். அணையில் தேங்கும் மழை நீரால், எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் சேகரமாகிறது. இந்நிலையில், இங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொள்கர்பள்ளம் என்ற இடத்தை சேர்ந்த சிலர் அணையில் இருந்து பெரிய குழாய் மூலம் நீரை உறிஞ்சி அவர்கள் வெட்டி வைத்துள்ள மிகப்பெரிய கிணற்றில் நிரப்பி வருகின்றனர். மேலும், அக்கிணற்றில் இருந்து, கொங்கர்பாளையத்தில் உள்ள தங்களது நிலத்துக்கு நீர் கொண்டு செல்லவும், அங்கு நீரை தேக்கி விற்பனை செய்யவும் முயன்று வருகின்றனர். ஆகவே, இதற்கு அனுமதியளிக்கக் கூடாது என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.