உடுமலை,
தலித்மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் வழங்காமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், தலித் பகுதிக்கு குடிநீர் வழங்க ஊராட்சி மன்ற நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதி மக்கள் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாயன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

உடுமலை தாலுகா குரல்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட முருக்கத்திபள்ளம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து கனகம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யபட்டு வருகிறது. ஆனால் கடந்த பல மாதங்களாக குடிநீர் விநியோகப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்றத்திலும் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், தலித் மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து தலித் மக்கள் கூறியதாவது, பல மாதங்களாக மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தன. அதுவும் குடும்பத்திற்கு இரண்டு குடங்கள் மட்டுமே விநியோகம் செய்யபட்டு வருகிறது. ஆனால் இதே ஊராட்சிக்கு உட்பட்ட மற்ற பகுதி மக்களுக்கு தேவையான சராசரி குடிநீர் விநியோகம் செய்யபடுகிறது. இதுகுறித்து குரல்குட்டை ஊராட்சி அதிகாரிகளிடம் , எங்களுக்கு ஏன் பாரபட்சமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று கேட்டால் பதில் கிடைப்பது இல்லை. மேலும், தெரு விளக்கு எரிவது இல்லை. இதுகுறித்து, உடுமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வந்தோம். ஆனால் அதிகாரிகள், எங்களை சந்திக்க மறுத்தனர். இதனால் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்கள். மேலும், எங்கள் குடியிருப்பு பகுதிக்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வருவதாக உறுதி அளித்து உள்ளனர். முன்னதாக எங்கள் கோரிக்கை நிறைவேற்ற படவில்லை என்றால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம் என்றார்கள்.

இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குரல்குட்டை கிளை செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கி. கனகராஜ், வாலிபர் சங்க கமிட்டி உறுப்பினர் செல்லமுத்து மற்றும் தலித் மக்கள் காலிக்குடங்களுடன் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: