கொல்கத்தா:
பாஜக-வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சரான பபுல் சுப்ரியோ, தனது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவரை, “காலை உடைத்து விடுவேன்” என மிரட்டியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

மத்திய கனரக தொழிற்சாலைத் துறை இணை அமைச்சராக இருப்பவர் பபுல் சுப்ரியோ. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர், பாடகராக இருந்து பின்னர் பாஜக-வில் இணைந்தார். கடந்த பொதுத்தேர்தலில் அசன்சோல் மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று தற்போது அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில், செவ்வாயன்று இவர், தனது தொகுதிக்கு உட்பட்ட நஸ்ருல் மான்ச் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, ஒருவர் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த பபுல் சுப்ரியோ, “உங்களுக்கு என்ன பிரச்சனை; என்ன நடந்து கொண்டே இருக்கிறீர்கள்.. இப்போது மட்டும் நீங்கள் உட்காரவில்லை என்றால் காலை உடைத்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளார். மேலும், தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்தும், சம்மந்தப்பட்ட நபர் அவரது இடத்தில் இருந்து நகர்ந்தால் காலை உடைத்து ஊன்றுகோலைக் கொடுத்து விடுங்கள் என்றும் உத்தரவு போட்டுள்ளார்.பாஜக அமைச்சரின் இந்த வெறிப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: