கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் உங்கள் காலை உடைத்து விடுவேன் என்று மாற்றுத் திறனாளிகளுக்கென நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ  மிரட்டல் விடுத்து பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தின் அசான்சோல் பகுதியில் செவ்வாய்க்கிழமை அன்று மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் பிற உபகரணங்களும் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மத்திய பாஜக அமைச்சர் பாபுல் சுப்ரியோ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் பாபுல் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒருவர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பாபுல் கோபமடைந்தார். இதையடுத்து ”ஏன் நடந்துகொண்டே இருக்கிறீர்கள்? தயவு செய்து உட்காருங்கள்” என்றார். மீண்டும் நகர்ந்த அவரைக் கண்டு ஆத்திரம் அடைந்த பாபுல் ”என்ன ஆயிற்று உங்களுக்கு, ஏதாவது பிரச்சினையா? உங்களின் ஒருகாலை உடைத்து, ஊன்றுகோலைத் தர முடியும்” என்று மிரட்டினார்.
பின்பு தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேசிய அவர், ”அந்த மனிதர் தன்னுடைய இடத்தில் இருந்து நகர்ந்தால், அவரின் காலை உடைத்து ஊன்றுகோலைக் கொடுங்கள்” என்றார். அவரது இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பலரும் அவரது பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: