===எம்.தாமஸ் சேவியர்===
2018 ஆகஸ்ட் மாதம், அருப்புக்கோட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இடைக்கமிட்டி செயலாளர்கள் கூட்டம் பற்றி விவாதம் திரும்பியது. வேலைப்பாணியில் மாற்றம் செய்வது எப்படி என்பது பற்றி நீண்டது. அதில் உருவானதுதான், நமது ஒன்றியத்தில் உள்ள 51 கிராமங்களையும் நடந்தே சென்று பார்த்து மக்களைச் சந்தித்தால் என்ன என்ற யோசனை. சமூக வலைத்தளம் மூலம் பிரதிபலிப்பு அறிய வெளியிட்டோம். ஜெயப்பிரகாஷ் என்ற தோழரின் பதிவில் பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா உட்பட பலரும் நடைபயண யோசனையைப் பாராட்டி தலைப்பும் முன்மொழிந்தது உற்சாகமூட்டியது.

கட்சியின் அருப்புக்கோட்டை ஒன்றியக்குழுவைக் கூட்டினோம். மாநாடுகள் சுட்டிக்காட்டியது போல் நம்மிடம் உள்ள தொய்வினை போக்கிட நடைபயணம் உதவும் என முன் மொழிந்தவுடன் ஏகமனதாக ஏற்கப்பட்டது. 4 மையங்களில் பேரவைக்கூட்டம், கிளைக்கூட்டங்கள் பயணத்தில் பங்கேற்போர் பட்டியல் என பணிகள் துவங்கின.

பயணப் பாதையை 2 முறை சென்று பார்த்து, உணவு, தங்குமிடம் முடிவு செய்த போது தான் 5 நாட்கள் என முடிவானது. சிறு தயக்கம்… 5 நாட்கள் முடியுமா? செலவிற்கு என்ன செய்வது? உணவு பெரும் செலவாக மாறுமோ?

கிளைகளில் தோழர்கள் கொடுத்த உற்சாகம். ஒரு முடிவினை அறிவிக்க வைத்தது. கிராமப்புறங்களில் அதிகாரம் செய்யும் நபர்கள் ஒரு அணியாக உழைப்பாளிகளுக்கு எதிராக மாறியுள்ளனர். அவர்களுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது என்பது நமது கட்சியின் முடிவு. ஆகவே அத்தகைய பெரும் பிரமுகர்களிடம் பணமோ, உணவோ பெறுவதில்லை. நமது உழைப்பாளிகளிடம், விவசாயிகளிடம் செல்வோம். 2 பேருக்கு 1 வீட்டில் உணவளிக்கச் செய்வோம் என அறிவித்தோம். கிளைகளுக்கும் கமிட்டிக்கும் சுமையில்லை என்ற திருப்தி ஏற்பட்டது.

“நமது கிராமம் – நமது உரிமை” என்ற முழக்கத்துடன் வாழ்க்கை காத்திடும் பயணம் என்ற முழக்கம் உருவானது. விவசாய விளை பொருளுக்கு 1.5 மடங்கு கூடுதல் விலை, இடுபொருட்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும், 100 நாள் வேலை, ரேசன் விநியோகம், முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை, பட்டா பிரச்சனை, தரமான சாலை, சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட கோரிக்கைகளோடு செப்டம்பர் 5ம் தேதி பிரச்சார பயணம் செங்கொடிகள் ஏந்தி, சிவப்புத் தொப்பிகள் அணிந்து கிராமங்கள் நோக்கி புறப்பட்டது.

கிராமங்களில் வீடு வீடாக துண்டுப் பிரசுரம் கொடுத்து நடத்திய சந்திப்பு, உரையாடல், பலனளித்தது. எடப்பாடி அரசின் நடவடிக்கையால் கிராமங்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்பு, விவசாய பாதிப்பு, வேலையின்மை, லஞ்ச ஊழல்கள் பற்றி- உழைப்பாளி மக்கள் பொரிந்து தள்ளினர். ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பீற்றிய ஒரு கிராமத்தைக் கூட காணமுடியவில்லை.

நாங்கள் பார்த்த கிராமம் எப்படி இருந்தது?
கட்டி முடித்து திறக்கப்படாமல் இருக்கும் கழிவறைகள் கொண்ட கோவிலாங்குளம்; குடிதண்ணீருக்காக பல மைல் தூரம் மக்கள் அலையும் நடுப்பட்டி; 100 நாள் வேலை ஒழுங்காக வழங்கப்படாததால் வேலையின்றி, கையில் காசின்றி தவிக்கும் கிராமங்கள்; கண்மாய்களுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் அடைக்கப்பட்டு வறண்டு கிடக்கும் பாலவநத்தம் போன்ற கண்மாய்கள்; விவசாயத்திற்கு என கட்டப்பட்ட குல்லூர்சந்தை அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை- மீன் வளர்க்க மட்டுமே என நிர்வாகம் அடம் பிடிப்பதால் விவசாயத்தொழிலையே கைவிட்டோம் என்கின்ற வேதனைக்குரலெழுப்பும் குல்லூர்சந்தை கிராமம்; எங்கள் ஊரில் மட்டும் அதிகமான பிள்ளைகள் ஊனமாயிருக்கிறதே ஏன் எனக் கண்ணீர் மல்க நிற்கும் திருவிருந்தாள்புரம்; சாலை வசதியின்றி பரிதவிக்கும் அருணாசலபுரம்; சாலை போக்குவரத்து வசதியின்மையால் மக்கள் குடியேற மறுக்கும் சமத்துவபுரம்; நகர்ப் பகுதியா ஒன்றியப் பகுதியா எனத் தெரியாமல் விழிபிதுங்கி நின்றவர்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் வழக்கு முடிவிற்காக ஏங்கி நிற்கும் காலனி பகுதி மக்கள்; யாரை காவு வாங்குவோம் என உடைந்த மின்கம்பம் வரவேற்கும் போடப்பட்டி; தாழ்ந்த மின் வயர்களால் பதறி நிற்கும் கிராமங்கள்; பிரச்சனைகளின் பின்னலில் வாழ்க்கை நடத்தும் தலித் மக்கள்…. இவைதான் 5 நாட்களும் நாங்கள் பார்த்த கிராமங்கள்.

இந்த கிராமங்களில் தான் காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை எங்களின் நடைபயணம். மக்களின் கனிவான உபசரிப்பு கடும் வெயிலையும் கட்டிப்போட்டது. கட்சி கிளை இல்லாத ஊர்களிலும் உணவளித்து உபசரித்தனர். உணவளித்த தாய்மார்கள், சகோதரிகள் கால் வலிக்குமே உங்களுக்கு; இரவில் வெந்நீர் வைத்து காலை நனைத்துக்கொள்ளுங்கள் என்ற பொழுது பெற்ற தாயின் பரிவு நிழலாடியது. பந்தல்குடியின் ராம்தாஸ்நகர், பாலவநத்தம் காலனி பகுதிகளில் உள்ள பல வீடுகளில் உணவளிப்பதற்காகவே வேலைக்குக்கூட செல்லாமல் காத்திருந்தது கண் கலங்க வைத்தது.

இந்த உற்சாகத்தில்தான் 5 நாட்கள், 91 கி.மீ.தூரம் 51 கிராமங்களில் எங்கள் பயணம் மக்களை நெருங்கியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 கிளைகள் உள்ள ஒன்றியக்கமிட்டி அருப்புக்கோட்டை. நடைபயணத்தில் அத்தனை கிளைகளும் ஈடுபட்டன. 2 கிளைகளிலிருந்து 6 பெண்கள் பயணத்தில் பங்கேற்றனர். பலர் குடும்பங்களோடு பங்கேற்றனர். 3 நாட்கள், 2 நாட்கள் பங்கேற்றவர்கள் அதிகம். 5 நாட்களும் எம்.தாமஸ் சேவியர், எஸ்.பூங்கோதை, எம்.கணேசன், சுப்புராஜ், நாராயணன், சோலைமலை, ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
இளம் வயதினர் அதிகமாக பங்கேற்றனர். புதிய பேச்சாளர்களை இந்த பயணம் அறிமுகப்படுத்தியது. பல ஊர்களில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை மக்கள் நினைவு கூர்ந்தனர். மறைந்த தலைவர்கள் தோழர்.பி.ராமமூர்த்தி, மணலி கந்தசாமி, எஸ்.ராமதாஸ், வாழும் தலைவர்கள், தோழர்கள் எஸ்.ஏ.பெருமாள், எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் உட்பட பலர் பங்கேற்ற கூட்டங்கள், இயக்கங்கள், அதில் அந்த மக்கள் பங்கேற்றது எனப் பலரும் நினைவுகளாக்கி மகிழ்ந்தனர். பயண நிகழ்வில் வயதான தோழர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

கட்சிக்கு புதிய தளங்களையும், பழைய தளங்களை புனரமைக்க தொடர்புகளையும் உருவாக்கித் தந்தது இந்த இயக்கம். பயண நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர்  எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார், வாலிபர் அரங்க தலைவர்கள் சிவராமன்,ஜெயபாரத், சரவணன், மாணவர் அரங்கத் தலைவர் வெண்ணிலா மற்றும் ஆர்யா உட்பட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.

செப்.9ம் தேதி பாலவநத்தம் கிராமத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. பயணம் நிறைவுற்றாலும் மக்கள் நம்மிடம் கொடுத்துள்ள பணிகள் புதிய பாதையை உருவாக்கித் தந்துள்ளது. 16க்கும் மேற்பட்ட கிராமங்களில் உடனடி இயக்கத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
“உங்களால் மட்டும்தான்யா எங்களக் காப்பாத்த முடியும்” என்று ஒரு கிராமத்தில் முதியவர் ஒருவர் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் சொன்னார். அந்த வார்த்தைகள் ஒவ்வொரு தோழரின் உள்ளத்திலும் எதிரொலிக்கிறது.

கட்டுரையாளர் : மாவட்டச்செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்), விருதுநகர்

Leave a Reply

You must be logged in to post a comment.