லக்னோ;
உத்தரப்பிரதேச மாநிலத்தில், அண்மையில் நடைப்பெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது. சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. இதற்கு, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி அளித்த ஆதரவே காரணமானது.
இவ்வளவு காலம் எதிரும் புதிருமாக இருந்த, இந்த 2 கட்சிகளும் தற்போது நெருங்கி வந்துள்ளன. அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலையும் இணைந்தே சந்திக்க முடிவு செய்துள்ளன.எனினும், 2 நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாயாவதி, பாஜக-வைத் தோற்கடிக்க, சமாஜ்வாதியுடன் கைகோர்க்கத் தயார் என்றும், ஆனால், உரிய மரியாதை கிடைக்காவிட்டால் தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டேன் என்றும் சூசகமாக குறிப்பிட்டிருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையே சாக்காக வைத்து, சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி அமையாது என்று பாஜக-வினர் பரப்பத் தொடங்கினர்.ஆனால், அந்த பரப்புரையையும், மாயாவதியின் சந்தேகத்தையும் அகிலேஷ் உடனடியாக அடித்து நொறுக்கியுள்ளார்.

மாயாவதியின் பேச்சு குறித்து, தனது கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றிய அகிலேஷ், “2019 தேர்தலில் பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பெரிய கூட்டணி அமைவதற்கு நான் எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்; தேவைப்பட்டால் இதற்காக நான் 2 அடி பின்நோக்கி செல்லவும் தயாராக இருக்கிறேன்; கூட்டணி வலுவாக அமைய வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே நோக்கம்; இந்த கூட்டணி அமையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த ஆட்சியை விரட்ட வேண்டியதற்கான நேரம் வந்து விட்டது. எதிர்க்கட்சிகள் அவர்களை விரட்ட ஒன்று சேருவது கட்டாயமாகும்” என்று கூறியுள்ளார்.
அதாவது, தொகுதிப் பங்கீட்டில் விட்டுக்கொடுக்கத் தயார் என்பதை வெளிப்படையாக கூறி, மாயாவதியின் சந்தேகத்தைப் போக்கியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.