===பேராசிரியர் கே. ராஜு===                                                                                                                                              கார்பன் வெளியீடுகளைக் கணக்கிட்டுக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது சிக்கிம். சிக்கிமின் பருவநிலை இருப்பைக் கணக்கிட்டுக் கட்டுப்படுத்தும் முன்முயற்சித் திட்டத்தை (SCIMS) கடந்த ஆண்டு அந்த மாநிலம் அறிவித்தது. மாநிலத்தின் போக்குவரத்து, சுற்றுலா, தொழில் நிறுவனங்கள், சாலைகள், வேளாண்மை போன்ற அனைத்துத் துறைகளையும் ஆய்வு செய்து ஒவ்வொன்றின் காரணமாகவும் வெளியிடப்படும் கார்பன் அளவுகள் கணக்கிடப்பட்டன. உதாரணமாக, சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரித்தது எனில், வாகனங்கள் எண்ணிக்கை கூடும்..உணவு விடுதிகளின் எண்ணிக்கை கூடும்..மாநிலத்தின் உள்பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளின் எண்ணிக்கை கூடும்..இவை எல்லாவற்றின் விளைவாக கார்பன் வெளியீடுகள் அதிகரிக்கும் என்று பொருள். எஸ்சிஐஎம்எஸ் திட்டத்தின்படி காடுகளிலிருந்து வெளியிடப்படும் வாயுக்களின் அளவைக் கொண்டு மாநிலத்தில் உள்ள காடுகளின் கார்பன் சேகரிப்பை வனங்கள் துறை கணக்கிட்டது.
“சிக்கிம் ஒரு கார்பன் நடுநிலை (carbon-neutral) மாநிலம் மட்டுமல்ல, அது ஒரு கார்பன் எதிர்நிலை (carbon-negative) மாநிலமும் கூட என்கிறது முதல்கட்ட எஸ்சிஐஎம்எஸ் அறிக்கை. அப்படியெனில், மாநிலத்தின் மொத்த பசுங்குடில் வாயுக்கள் வெளியீட்டை விட நமது காடுகள் சேகரிக்கும் கார்பன் அளவு (carbon sequestration) கூடுதலாக இருக்கிறது என்று பொருள்.

தொழில் துறையிடமிருந்தும் சுற்றுலாத் துறையிடமிருந்தும் மேலும் தகவல்களைப் பெற்று இன்னும் ஆறு மாதங்களில் அறிக்கையை இறுதி செய்வோம்” என்கிறார் மாநிலத்தின் காடுகள் பாதுகாப்பு முதன்மைச் செயலாளர் தாமஸ் சாண்டி. மற்றொரு வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசமும் பெரும்பாலான காடுகள் அழியாமல் பாதுகாத்து வைத்திருக்கும் இன்னொரு மாநிலம். அதன் மக்கள் தொகை மிகவும் குறைவு. அதனால் சிக்கிமைப் போல அருணாச்சலப் பிரதேசமும் ஒரு கார்பன்-எதிர்நிலை மாநிலமே.சிக்கிமின் மொத்த பரப்பளவில் 82 சதம் காடுகளின் கீழ் உள்ளது. அதில் சுமார் 31 சதம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. 7 சதம் அடர்ந்த காட்டுப் பகுதி. மரங்கள்,புல்வெளிகள், பிற தாவரங்கள் எல்லாம் ஒளிச்சேர்க்கை  மூலம் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவைச் சேகரித்து அடிமரங்கள், கிளைகள், இலைகள், வேர்கள் ஆகிய உயிரித்திரள்களிலும் மண்ணிலும் கார்பன் ஆகப் பாதுகாத்து வைக்கின்றன. காடுகள் அழிப்பு, காட்டுத் தீ, படிம எரிபொருள் வெளியீடுகள் காரணமாக காற்று மண்டலத்தில் சேரும் கரியமில வாயுவின் அளவைக் குறைக்க இந்த ஒளிச் சேர்க்கை பயன்படுகிறது. பருவநிலை மாற்றம் தொடர்பாக பாரிசில் நடந்த உலக நாடுகள் மாநாட்டில் எட்டப்பட்ட ஒப்பந்தம் காற்றுமண்டலக் கார்பனைக் குறைப்பதில் காடுகளுக்குள்ள முக்கியப் பங்கினை அங்கீகரித்துள்ளது.

சிக்கிம் மாநிலம் நடத்தியுள்ள ஆய்வின் மூலம் கிடைத்துள்ள அறிக்கை இறுதிப்படுத்தப்படாததால், கூடுதல் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள சாண்டி மறுத்துவிட்டார். மாநிலத்தின் கார்பன் வெளியீடுகள் கார்பன்-நடுநிலை அளவைவிட குறைவாக இருந்த போதிலும் கூட, கடந்த 10 ஆண்டுகளில் கார்பன் வெளியீடுகள் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக் காட்டி எச்சரிக்கவும் தவறவில்லை. “கார்பன் நடுநிலையைக் காப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்கு எங்களு டைய ஆய்வு மாநில அரசுக்கு உதவி செய்யும்” என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் சாண்டி. ஒவ்வொரு துறையிலும் கார்பன் வெளியீடுகளைக் கண்காணிக்கும் துணைத்துறைகளை மாநில அரசு அமைக்க இருக்கிறது. மாநிலத்தில் கொணரப்படும்எதிர்காலத் திட்டங்கள் கார்பன்-எதிர்நிலைத் திட்டங்களாகவோ கார்பன்-நடுநிலைத் திட்டங்களாகவோ அமைவதற்கான வழிமுறைகளை இத்துணைத்துறைகள் கண்டறியும். மாநில வனத்துறை இவற்றையெல்லாம் மேற்பார்வையிட்டு கண்காணிக்கும் துறையாக இருக்கும். இந்த முயற்சிகளுக்குத் தன் பாராட்டைத் தெரிவித்துக் கொண்ட சிக்கிம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.டி.ராய், “கார்பன் வெளியீடுகளைக் குறைப்பதில் மாநிலம் எந்தத் திசையில் செல்லும் என்பதை இந்த ஆய்வுகள் தீர்மானிக்கும் என்பதால் அவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. சுத்தமான தண்ணீர், சுத்தமான காற்று போன்ற சுற்றுச்சூழல் பராமரிப்புச் சேவைகளைத் திறம்பட நிர்வகிக்கும் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகையை மானியமாக அளித்து உற்சாகப்படுத்த வேண்டும்” என்கிறார்.

உதவிய கட்டுரை ; ஆகஸ்ட் 16-31 டவுன் டு எர்த் இதழில் நிதி ஜம்வால் எழுதிய கட்டுரை

Leave a Reply

You must be logged in to post a comment.