நாகப்பட்டினம்;
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வாழக்கரையைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் பி.வைரன் செவ்வாய்க்கிழமை காலை அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 83.

தோழர் பி.வைரன், 1996 முதல் 2001 வரை, கீழையூர் ஊராட்சி ஒன்றியப் பெருந் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில், ஒன்றுபட்ட நாகை- திருவாரூர் மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினராகவும், பின்னர் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும், நாகப்பட்டினம் வட்டச் செயலாளராகவும், கீழையூர் ஒன்றியச் செயலாளராகவும் செங்கொடி இயக்கத்திற்குப் பெருந்தொண்டாற்றியவர்.

விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் மாவட்டக் குழுவில் இணைந்து 1972-ல் நடைபெற்ற கூலி உயர்வுப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழை எளியவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்காக ஓயாது உழைத்தவர். தோழர் பி.வைரனின் இறுதி ஊர்வலம், புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வாழக்கரையில் அவரது இல்லத்திலிருந்து புறப்படுகிறது.

கே.பாலகிருஷ்ணன் இரங்கல்
ஒன்றுபட்ட திருவாரூர் – நாகை மாவட்ட கட்சி, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் இயக்கம் ஆகியவற்றில் செயல்பட்ட தோழர் பி.வைரன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது என மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:
1964 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த தோழர் பி.வைரன் ஒன்றுபட்ட திருவாரூர் – நாகை மாவட்டம், நாகை மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளிலும் திருவாரூர், நாகை மாவட்ட செயற்குழுவிலும் கீழையூர் ஒன்றியச் செயலாளராகவும் பணியாற்றியவர். கீழையூர் பகுதிகளில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டங்களில் முன் நின்றவர். விழுந்தமாவடியில் உள்ள கோவிலில் தலித் மக்கள் ஆலய நுழைவுப் போராட்டத்தை 2000 ஆம் ஆண்டு நடத்தியபோது, தோழர் வைரன் முன் நின்றார். அனைத்து மக்களும் ஆலயத்தில் நுழையலாம் என்ற முடிவு ஏற்பட்டதும், அந்தப் போராட்டம் முடிவுற்றது.
கீழையூர் ஒன்றிய பெருந்தலைவராக 5 ஆண்டு காலம் பணியாற்றினார். அப்போது, சிறு குற்றச்சாட்டுக்கு கூட ஆளாகாமல் அவரது பணி அமைந்திருந்தது. அத்தகைய தோழர் பி.வைரன் மறைவை அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும் இதயப்பூர்வமான அஞ்சலியையும் உரித்தாக்குகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைவர்கள் இரங்கல்
தோழர் வைரன் மறைவுச் செய்தியறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளருமான பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் செய்திகள் அனுப்பியுள்ளனர்.
சி.பி.எம். நாகை மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முத்துப்பெருமாள், எஸ்.துரைராஜ், த.லதா, ஜி.ஜெயராமன், கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன், தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு, நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும், பொதுமக்களும் தோழர் பி.வைரன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.