சென்னை,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் செப். 15,16 தேதிகளில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெகுமக்களின் வாழ்வியலில் ஒன்றிப் போயிருக்கும் கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த நிகழ்வுகளையும், திருவிழாக்களையும் விதவிதமாக விடிய விடிய நடத்துவது தொன்றுதொட்டுள்ள வழக்கமாகும். இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் “கலை இரவு” என்கிற கொண்டாட்ட நிகழ்வை மாநிலமெங்கும் விடிய விடிய நடத்திவருகிறது. ஆனால் சமீபகாலமாக, இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிப்பது, ஆள் நடமாட்டமில்லாத ஒதுக்குப்புறங்களில் நடத்தச் சொல்வது, இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்று நேரக்கட்டுப்பாடு விதிப்பது, நடைமுறைச் சாத்தியமற்ற பல்வேறு நிபந்தனைகளை விதிப்பது என காவல் துறை செயல்பட்டு வருகிறது. இது மட்டுமல்ல, அது உள்ளரங்க நிகழ்ச்சிகளிலும் கூட தலையிடுவது, நிகழ்வுகளுக்கு இடம் தரக்கூடாதென அரங்க நிர்வாகங்களை மிரட்டுவது, ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு அபராதம் விதிப்பது என்கிற நிலைக்குச் செல்கிறது காவல்துறை.

அரசியல் சாசனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை குடிமக்களுக்கு மறுக்கும் இவ்விதமான நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியவை. எனவே, கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகளுக்கு இடம் மற்றும்  நேரக் கட்டுப்பாடு விதிக்கக் கூடாதென காவல்துறைக்கு அறிவுறுத்தும் படி தமிழக அரசை தமுஎகச மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.

பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தடை!
இறை நம்பிக்கையும் வழிபாட்டுணர்வும் குடிமக்களின் தனிப்பட்ட தேர்வு. விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதும் கூட இவ்வகையானதே. ஆனால், இப்போது விநாயகர் சதுர்த்தி என்பது பிள்ளையார் சிலைகளை தத்தமது வீடுகளில் வைத்து வணங்கிவிட்டு நீர்நிலைகளில் கொண்டுபோய் கரைத்துவிடக்கூடிய பக்தர்களின் தனிப்பட்ட விவகாரமல்ல. அது மக்களை மதரீதியாக பாகுபடுத்தவும், மதவாதத்தை வெறியேற்றவும், வெறுப்பரசியலை கிளறிவிட்டு சிறுபான்மையர் மீது வன்முறைகளை நிகழ்த்துவதற்கும சங் பரிவாரத்தின் நிகழ்ச்சிநிரலாக மாறியுள்ளது.  சங்பரிவார அமைப்புகள் பெருநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை பொது இடங்களில் பெரும் முதலீட்டில் பிரம்மாண்டமாய் பிள்ளையார் சிலைகளை நிறுவுகின்றன. இதனால் போக்குவரத்தில் மாற்றம், மின்சார நிறுத்தம், சோதனைக் கெடுபிடிகள் என மக்கள் கடும் அவதிக் குள்ளாகின்றனர்.

நச்சுத்தன்மையுள்ள வேதிக்கலவைகளால் செய்யப்படும் இந்தச்சிலைகளை கரைப்பதால் நீர்நிலைகளும் மாசடைகின்றன. சிலை வைப்பு, பாதுகாப்பு, வழிபாடு, கரைப்பு ஊர்வலம் என இதனோடு தொடர்புடைய வேலைகளுக்காக திரட்டப்படும் சிறார்களும் இளைஞர்களும் மதவெறி நஞ்சேறிய சங்பரிவார வன்முறையாளர்களாக சீரழிக்கப்படுகின்றனர். இவர்களால் சிறுபான்மைச் சமூகத்தவரின் உயிருக்கும் உடைமைக்கும் பொது அமைதிக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சங்பரிவாரத்தினரின் இத்தகைய சட்டவிரோத சமூகவிரோதச் செயல்களுக்கு, பொது இடங்களில் பிள்ளையார் சிலை வைக்க அனுமதிக்கப்படுவதும் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே, பொது இடங்களில் பிள்ளையார் சிலை வைப்பதை அரசு தடை செய்து, பிள்ளையார் வழிபாட்டை அவரவரது தனிப்பட்ட நடவடிக்கையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: