பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் இந்து முன் னணி சார்பில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா பங்கேற்று, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அப்போது, விநாயகர் சிலையை ஊருக்குள் எடுத்துச் செல்ல முயற்சி நடந்தது. அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.இதையடுத்து காவல்துறையினருடன், எச்.ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்துக்களுக்கு எதிராக காவல்துறை அதிகாரி செயல்படுவதாக சாடினார். அதை மறுத்த காவல்துறை அதிகாரி, ‘‘உயர்நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுகிறோம்’’ என்றார். அப்போது, எச்.ராஜாவின் ஆவேச பேச்சும், காவல்துறை மற்றும் நீதித்துறையை கடுமையான வார்த்தைகளால் சாடினார். இது தொடர் பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்து வழக்குரைஞர் ஆர்.சுதா, டி.ஜி.பி.க்கு புகார் மனுவை அனுப்பினார். இதற்கிடையில், எச்.ராஜா மீது திருமயம் காவல்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். எச்.ராஜாவை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக் கப்பட்டன.இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் திங்களன்று(செப்.17) காலை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது வழக்கறிஞர்கள் ஆர்.சுதா, கனகராஜ், ராஜாமுகமது உள்ளிட்டோர் ஆஜராகி, ‘எச்.ராஜா நீதித்துறையை தரக்குறைவாக பேசியுள்ளார். எனவே, அவர் மீது இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.அதற்கு நீதிபதிகள், ‘எச்.ராஜா மீது காவல்துறை தரப்பில் பல சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, ஏதாவது புகார் தெரிவிக்க வேண்டும் என்றால், காவல்துறையிடம் புகார் மனு கொடுங்கள். எச்.ராஜா மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாங்கள் பதிவு செய்ய முடியாது’ என்றனர்.அதற்கு வழக்கறிஞர்கள், ‘போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். இதற்கு முன்பு பல வழக்குகளில் காவல்துறையினர் இவ்வாறு செயல்பட்டுள்ளனர். எனவே, எச்.ராஜா மீது நீதிமன்றம் தான் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்றனர்.இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்ய முடியாது. வேண்டுமென்றால், எச்.ராஜா மீது நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யுங்கள். அந்த வழக்கு களை நாங்கள் விசாரணைக்கு எடுக்கின்றோம்’ என்றனர். ஆனால் அடுத்த சில மணி நேரத்துக்குள் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது.சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு அமர்வில் இருந்த நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் இருவரும் எச்.ராஜா தொடர்பான விவகாரத்தை கையில் எடுத்தனர்.
அவர்கள் இருவரும் முதல் நடவடிக்கையாக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் கண்ணப்பன், விஜய் நாராயணன் இருவரையும் நேரில் வரவழைத்தனர்.அவர்களிடம் நீதிபதிகள், ‘‘திருமயம் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எச்.ராஜா காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை பார்த்தீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவர்கள் இருவரும் கேள்விப்பட்டோம்’’ என்று தெரிவித்தனர். உடனே நீதிபதிகள் இருவரும் இந்த விவகாரத்தில் நாங்கள் தாமாக முன் வந்து வழக்கு ப் பதிவு செய்கிறோம் என்று தெரிவித்தனர்.மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக எச்.ராஜா 4 வாரங்களுக் குள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாவட்ட நீதிமன்றத்தை அணுக வழக்கறிஞர் சூரிய பிரகாசிற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது

Leave A Reply

%d bloggers like this: